பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128 ♦ நான் கண்ட பெரியவர்கள்


முன்னர்த் திருமணம் செய்துகொண்ட இவன், திருமணம் செய்த நேரத்தில் பட்சி எப்படி இருந்தது என்று பாருங்கள்” என்றார். அவர்களும் பஞ்சாங்கத்தைப் புரட்ட ஆரம்பித்தனர். அந்த விநாடியில் திருவி.க என்ற மாமனிதரின் மற்றொரு பக்கம் வெளிப்பட்டது. எழுந்து நின்று கையின் சுண்டு விரலை மட்டும் நீட்டிக் கொண்டு “முதலியார்! இதை நான் அனுமதிக்க மாட்டேன். இவன் தகப்பனார் பெரிய கோபக்காரர். அவருக்குப் பயந்து கொண்டுதான் இவன் கலியாணத்திற்கே நான் போகவில்லை. இவன் தலையை வைத்துப் பந்தயம் ஆடியிருக்கிறான். சரவண முதலியார் என்ன செய்வாரோ என்று தெரியவில்லை. இந்த நேரத்தில் பட்சி பறவையென்று எதையாவது சொல்லி அவன் மனத்தைக் குழப்பிவிடாதீர்கள். உங்களை ரொம்ப வேண்டிக் கேட்டுக் கொள்ளுகிறேன். தயவுசெய்து அதுபற்றிப் பார்க்க வேண்டாம்” என்றார். ஆனால் தெய்வசிகாமணி முதலியார் விடுவதாக இல்லை. பார்த்தே ஆகவேண்டும் என்கிறார். சின்னையாவோ வேண்டாமென்கிறார். இந்தப் போராட்டம் முற்றிய நிலையில் அதுவரை சும்மாயிருந்த நான் ‘தயவு செய்து எதை வேண்டுமானலும் பாருங்கள். கோளறு பதிகம் பதினொரு பாடல்களையும் பாடச் சொல்லி, அது முடிந்த பிறகு ‘மண்ணின் நல்ல வண்ணம் பதிகம்’ பாடும்போதுதான் தாலி கட்டினேன்’ என்றேன். இதற்குமேல் எந்தப் பட்சி சாஸ்திரமும் என்னை ஒன்றும் பண்ணமுடியாது. சின்னையா! அவர்கள் திருப்திக்குப் பார்த்துக் கொள்வதில் எனக்கொன்றும் தடையில்லை. அதில் என்ன வந்தாலும் நான் அதைப் பொருட்படுத்தவோ சட்டை செய்யவோ மாட்டேன்’ என்று கூறியவுடன் முதலியார் மறுபடியும் அவர்களைத் துண்டிச் செப்டம்பர் 15 அன்று காலை எட்டுமணிக்குப் பட்சியின் நிலை என்ன” என்று கேட்டார். ஜோசியர்கள் பார்த்து விட்டு “அது பட்சி அரசிலிருந்த நேரம்” என்று ஆச்சரியத்துடன் சொன்னார்கள்.