பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130 ♦ நான் கண்ட பெரியவர்கள்


ஈ.வெ.ரா, திரு.வி.க. வீட்டிற்கு வருகிறார் என்றும் அவரிடம் பேசிக்கொண்டிருக்கிறார் என்றும், அவரைத் தம் கூட்டத்திற்கு அழைக்கிறார் என்றும் அறிந்த இச்சைவப் பெருமக்கள் திரு.வி.க.வை ஒதுக்கியே வைத்து விட்டார்கள். அன்றியும் சமரச சன்மார்க்கம் பேசுகின்ற திரு.வி.க. பழைமை விரும்பிச் சைவர்களுக்கு ஏற்புடையவராக இல்லை. பகுத்தறிவுவாதிகள், விஞ்ஞானம் என்ற சொல்லைக்கூட நன்கு சொல்லத் தெரியாதவர்கள் கம்ப இராமாயணத்தையோ, பெரிய புராணத்தையோ ஒருமுறை கூடப் படித்துப் பாராதவர்கள் சமயங்களை இழித்தும், பழித்தும் பேசினர். இவர்களுக்கு எதிராகச் சமயத்தை விஞ்ஞான அடிப்படையில் நின்று பேசியதாலும், அறிவுக் கொள்கையை ஏற்றுக்கொண்டு, ஆனால் அது தவறான வழியில் செல்கிறது என்று பேசியதாலும் பல மேடைகளில் பேசும் வாய்ப்பு எனக்கு இருந்து வந்தது.

இப்பொழுது சின்னையாவிற்குக் கண் பார்வை பெரிதும் குன்றிவிட்டது. அந்த நிலையில்தான் தம்முடைய மேடையில் பேசவருமாறு பெரியார் இவரை அழைத்தார். சின்னயாவும் அதற்கு ஒப்புக்கொண்டார். ஜன்னலுக்குப் பின்புறம் இதனைக் கேட்டுக்கொண்டிருந்த நான், பெரியார் சென்றதும் வெளியே வந்து சத்தம் போட்டேன். ‘பெரியார் கூட்டத்திற்கு போகுமளவிற்கு உங்கள் நிலை இறங்கி விட்டதா? இது என்ன நியாயம்?’ என்று கேட்டேன். அப்பொழுது அந்த மகான் சொன்ன வார்த்தைகள் என் வாழ்க்கையின் பிற்காலத்தில் பெரிதும் பயன்பட்டன. “சம்பந்தா! என் மனத்தில் புதிய புதிய சிந்தனைகள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. உடனுக்குடன் எழுதவோ வாய்ப்பு வசதி இல்லை. மேடையில் பேச வேண்டும். இக்கருத்துக்களை மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும் என்ற வெறி என்னுள் பொங்கிக்கொண்டே இருக்கிறது. சைவப் பெருமக்களோ என்னை