பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132 ♦ நான் கண்ட பெரியவர்கள்


போக்கில் அன்று மதியம் ஜெமினிவரை தாங்கள் உடலைக் கொண்டுவருவதாகவும் அதன்பிறகு உடலைப் பெற்று மேற்கொண்டு காரியங்களைச் செய்யலாம் என்றும் கூறிச் சென்றனர். எனவே, மதியத்தில் திரு.வி.க.வின் சகோதரர் உலகநாத முதலியாரின் இரண்டு மருமகன்களும், மு.வரதராசன், நான் ஆகியோரும் ஜெமினியில் நின்று கொண்டிருந்தோம். பெரியார் ஈ.வே.ரா. அவர்களும், மிகப் பெரிய அவரது தொண்டர் படையணியும் நின்று கொண்டிருந்தது. வண்டியில் சடலம் வந்தது. எல்லோருமாகச் சேர்ந்து ஐ.ஜி. அலுவலகத்தை அடுத்துள்ள சுடுகாட்டிற்கு வந்தோம். சிதையில் உடலம் வைக்கப்பட்டது. பெரியாரின் தொண்டர்கள் பத்துப் பேர் கொள்ளி வைப்பதற்குரிய சிறு சிறு பந்தங்களை வைத்துக் கொண்டு சுற்றி நின்றனர். பெரியார் அவர்களும் தடியை ஊன்றிக்கொண்டு நின்றார். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கூடியிருந்த கூட்டம் முழுவதும் ஈ.வெ.ரா. பெரியாரின் தொண்டர் கூட்டம். சைவப்பெருமக்கள் யாருமோ, தமிழ்ப் புலவர்கள் யாருமோ ஒருவர் இருவர் தவிர சுடுகாட்டிற்கு வரவில்லை. என்னசெய்வதென்று தெரியாமலிருந்த என்னைப் ‘பெரியாரிடம் சென்று நாமிருவரும்தான் கொள்ளி வைக்க வேண்டும் இதுதான் ஐயாவின் விருப்பம்’ என்று சொல்லுமாறு வேண்டினார் மு.வரதராஜன். எனவே நானே பெரியாரிடம் சென்று “ஐயா! நானும் வரதராஜனும் கொள்ளி வைக்க வேண்டும்மென்பதே சின்னையாவின் விருப்பம். அப்படித்தான் மரிப்பதற்குச் சில நாட்களுக்கு முன்னர் என்னிடம் கூறினார்” என்று கூறி நிறுத்தினேன். இப்பொழுது பெரியாரின் பெருமை வெளிப்பட்டு நின்றது. “அப்படியா சொன்னான் கலியாணசுந்தரம்! அப்படீன்னா நீங்களே செய்யுங்க” என்று சொல்லிவிட்டு, தீப்பந்தங்களோடு சிதையைச் சுற்றி நின்ற தம் தோழர்களை மீண்டு வந்துவிடுமாறு பணித்தார்.