பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தமிழ்த் தென்றல் திரு.வி.க. ♦ 133


ஆனால் அவர்களோ வருவதாக இல்லை உடனே பெரியாருக்குச் சினம் வந்தது. ”டேய்! சொல்றனே காதில் விழலை, தீப்பந்தங்களை ஒரமா வெச்சிட்டு வாங்கப்பா’ என்று கர்ஜித்தார். பக்கத்தில் நின்று கொண்டிருந்த என்னைப் பார்த்து “தம்பி! நீங்க எப்பிடிச் செய்வீங்க இதை” என்று கேட்டார். “ஐயா! சின்னய்யா அவர்களுக்கு மிகவும் பிடித்த திருவாசகத்தில், சிவபுராணத்தைச் சொல்லிச் சிதைக்குத் தீ மூட்டுவோம்” என்றேன். “அப்படியே செய்யுங்க தம்பி” என்று சொல்லிய பெரியார் அவ்விடத்தை விட்டுப் புறப்படாமல் அங்கே நின்றார். நானும் வரதராஜனும் தலைமாட்டில் அமர்ந்து சிவபுராணத்தைத் தொடங்கினோம். 17 வரிகள் பாடுகின்றவரையில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த பெரியார் ஆகிய அப்பெரியார், தம்முடைய அருமை நண்பருக்கு இறுதியாக ஒரு கும்பிடு போட்டுவிட்டுத், தொண்டர் படை சூழப் புறப்பட்டுப் போய்விட்டார்.

தேசத்தொண்டு, தமிழ்த்தொண்டு, சைவசமயத் தொண்டு ஆகியவற்றிற்காக வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த அம்மகானின் இறுதி ஊர்வலத்தில் தேசபக்தித் தொண்டர்கள், தமிழ்ப் புலவர்கள், தம்மைச் சைவர்கள் என்று சொல்லிக்கொள்கிறவர்கள் யாரும் வரவில்லை. எதிர்க்கட்சியினர் என்று குறிக்கப்பெற்ற பெரியார் ஈ.வெ.ரா.வும் அவர்களுடைய தொண்டர்கள் நூற்றுக்கணக்கானவர்களும் இறுதி வரை நின்று இறுதி வணக்கம் செய்துபோயினர். தமிழகம் தனக்கும் மொழிக்கும் இறுதிவரைத் தொண்டாற்றிய திரு.வி.க. போன்ற பெருமக்களுக்கு எப்படி நன்றி பாராட்டுகிறது என்பதை அன்று கண்கூடாகக் காண முடிந்தது.