பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெரியார் ஈ.வே.ரா. ♦ 135


தெ.பொ.மீ. அவர்களும் சொல்லியது எவ்வளவு உண்மையானது என்பது தெற்றென விளங்கிற்று.

இந்த நிலையில் சில ஆண்டுகள் ஓடி மறைந்தன. ஒருமுறை திரு. கி.வீரமணி தொலைபேசியில் என்னை அழைத்துப் “பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் பற்றி உங்கள் கருத்தென்ன?” என்று கேட்டார். ‘நான் முழுவதுமாக ஆதரிக்கிறேன். இன்னும் சில ஆண்டுகளுக்கு முன்பே இது வந்திருந்தால் நன்மையாக இருந்திருக்கும்’ என்று கூறினேன். உடனே வீரமணி ஒரு தேதியைச் சொல்லி அந்த நாளில் “பெரியார் தலைமையில் நடைபெறும் கூட்டத்திற்கு வந்து பேசமுடியுமா?” என்று கேட்டார். ‘தாராளமாக வருகிறேன்’ என்று ஒத்துக் கொண்டேன்.

கூட்டம் நடைபெறும் நாளன்று என் மனைவியும் நானும் அக்கூட்டத்திற்கு சென்றோம். உயரமான ஒரு மேடையில் சம்மணம் கூட்டி ஐயா அவர்கள் அமர்ந்திருந்தார்கள். கூட்டம் நிரம்பி வழிந்தது. நான் அருகே வந்ததும், திரு. வீரமணி அவர்கள் ஐயா அவர்களிடம் சென்று “அ.ச. இதோ வந்துவிட்டார்” என்று கூறினார். பண்பில் மேம்பட்ட அப்பெரியார் வெகுபாடு பட்டு உடனே எழுந்து நின்றுவிட்டார். தடிக்கம்பை ஊன்றிக்கொண்டு “தம்பி வாங்க வாங்க நல்லா இருக்கீங்களா? அம்மாவைக் கூட்டிக்கொண்டு வரலையா?” என்று கேட்டார். பக்கத்தில் நின்று கொண்டிருந்த என் மனைவியைச் சுட்டிக் காட்டி ‘ஐயா இதோ இருக்கிறாள்’ என்றேன். வைணவக் குடும்பத்தில் பிறந்த என் மனைவி உடனே குனிந்து பெரியாரின் கால்களைத் தொட்டு வணங்கினாள். குனிந்து கொண்டிருக்கும் அவள் தலைமேல் தமது வலக்கையை வைத்துப் பெரியார் அவர்கள், வைணவமுறையில் ஆசீர்வாதம் செய்தார். அண்மையில் நின்றுகொண்டிருந்த திரு. வீரமணி அவர்களுக்கும், அமரர் நெடுஞ்செழியன் அவர்களுக்கும் முகத்தில் எள்ளும்கொள்ளும் வெடித்தது.