பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136 ♦ நான் கண்ட பெரியவர்கள்


பகுத்தறிவுத் தந்தையின் காலில் அவர்கள் தொண்டர்களின் கூட்டத்தின் நடுவில் ஒரு பெண் விழுந்து வணங்குவதும், அவள் தலையிற் கைவைத்து அவர் ஆசீர்வாதம் செய்வதும் இந்தப் பகுத்தறிவுப் பக்தர்களுக்குப் பெருஞ்சினத்தை உண்டாக்கியது. ஆனால், ஒன்றும் செய்வதற்கில்லை. காரணம் இதனைச் செய்தவர் பகுத்தறிவுத் தலைவரல்லவா? வேறு வழியில்லாமல் வாயை மூடிக் கொண்டு இருந்துவிட்டனர். இதன் பிறகு நடந்தது பெரியார் என்ற மாமனிதரின் மற்றொரு பக்கத்தை எனக்கு அறிவித்தது.

வணங்கியெழுந்த என் மனைவியைப் பார்த்து “அம்மா! ரொம்ப கோவக்காரராச்சே இவர், எப்படியம்மா இவரோடு காலந்தள்ளுறீங்க?” என்று கேட்டுவிட்டார். ஒரு கனங்கூடத் தாமதியாமல் என் மனைவி ‘ஐயா நீங்க சொல்றது அந்தக் காலம், அவர் ரொம்ப மாறிவிட்டார்’ என்று விடை கூறினாள். சரியான இக்கட்டிலிருந்து என் மனைவி என்னைக் காப்பாற்றிவிட்டாள் என்ற மகிழ்ச்சியோடு ஐயா அவர்களைப் பார்த்தேன். அந்தப் பொல்லாத கிழவன் அடுத்துக் கூறியது என்னை வெட்கமடையச் செய்தது. “தம்பி அம்மா மாதிரி பொம்பளைங்க வீட்டிலை இருக்கிறதனாலைத்தான் நாம கெளரவமா வெளியில வந்து வாழ முடியுது” என்றார். பெண்மையைப் போற்றுவதில் திரு.வி.க. எவ்வளவு சிறந்தவரோ அவ்வளவு சிறந்தவர் அவருடைய நண்பர் அமரர் பெரியார் அவர்கள். இந்த உரையாடல் அண்மையில் நின்ற நாலைந்து பேருக்குமட்டுமே கேட்டிருக்கும். ஆதலால் இத்தனை ஆண்டுகள் கழித்து இதனைக் கூறுவதன் மூலம் பெரியார் என்ற மாமனிதருள் மறைந்து நின்ற ஒரு பகுதியை வெளிக்காட்ட முடிகிறது.