பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குருதேவர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் ♦ 139


பேசினனா?” என்று புதுமையாகக் கேட்டார். பல்கலைச் செல்வரை நன்கு அறிந்திருந்த திரு.வி.க. அவர்கள் உடனே பேச்சை மாற்றிவிட்டார்கள்.

சாதாரணமாக ஒரு தலைப்பைத் தந்து பல்கலைச் செல்வரைப் பேசச் செய்தால் அது சராசரி மனிதருடைய சாதாரணப் பேச்சுப் போலவே இருக்கும். தெ.பொ.மீ. என்ற புற மனிதர் பேசுவது இப்படித்தான் இருக்கும். தெ.பொ.மீ. என்ற அகமனிதரைச் சுண்டியிழுத்து வெளியே கொண்டு வந்து பேசுமாறு செய்தால், அது அவர்தான் பேசுகிறாரா என்று ஐயப்பட வைக்கும்.

இந்த உரையாடலின்போதுதான் முதன் முதலில் ‘குருதேவா’ என்று அவரை விளித்தேன். காரண காரியங்களை ஆராய்ந்து நான் இவ்வாறு அழைக்கவில்லை. என்னையும் அறியாமல் வெளிவந்த சொல்லாகும் அது. என் உள்நின்று ஏதோ ஒரு தூண்டுதலால் ‘குருதேவா’ என்ற வார்த்தை வெளிப்பட்டதாகலின் அவரின் இறுதிக் காலம்வரை இந்தச் சொல்லாலேயே அவரை விளித்துப் பேசினேன். இதிலும் ஒரு வியப்பு உண்டு. திடீரென்று ஒரு மனிதரை, அதுவும் முதன்முதலில் சந்திக்கும் ஒரு மனிதரைக் ‘குருதேவா’ என்று அழைத்தால், ஏன் இப்படி அழைக்கிறோம் என்று அவர் நினைக்கமாட்டாரா? புதுவிதமான இந்த அழைப்பிற்கு என்ன காரணம் என்று கேட்கமாட்டாரா? அப்படிக் கேட்டிருந்தால், தெ.பொ.மீ. என்பவர் சராசரி மனிதரில் ஒருவர் என்று நினைத்திருப்போம். ஆனால், இந்த மனிதர் இப்படி ஒரு புதுப்பெயரை இட்டு அழைத்ததில் எவ்வித மாற்றத்தையோ, வியப்பையோ, முகத்திலோ, பேச்சிலோ காட்டவில்லை. அதுதான் தெ.பொ.மீ.

1940 வரை சில மேடைகளில் குருதேவருடன் பேசும் வாய்ப்பு இருந்தது. 1940இல் நான் சென்னைக்குக் குடி வந்துவிட்டேன். குருதேவரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பும்,