பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142 ♦ நான் கண்ட பெரியவர்கள்


சொல்லுங்க, அந்த விநாடியே நான் ஒழிஞ்சுடுறேன்” என்று நிறுத்தினார். ஒரு விநாடி நிசப்தம்; அடுத்த விநாடி “தெ.பொ.மீ. வாழ்க, துணைவேந்தர் வாழ்க” என்ற சப்தம் முன்பிருந்த ‘ஒழிக’ சப்தத்தைவிட அதிகமாக எழுந்தது. அத்துணைப் பேரும் ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டுத் திரும்பிப் போய்விட்டனர். மாடியேறிச் சென்ற குருதேவர், வியப்பில் ஆழ்ந்து, தம்மை மறந்து நின்ற ஆட்சிக்குழு உறுப்பினர்களையெல்லாம் மேலே வரச்சொல்லிக் கூட்டத்தை விட்ட இடத்திலிருந்து தொடங்கிவிட்டார். அந்த உறுப்பினர்களுள் ஒருவர், சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிகழ்ச்சியை என்னிடம் சொல்லி வியந்தார். அப்பொழுது அந்த நண்பர் சொல்லியது: “அ .ச.! நடந்ததெல்லாம் ஒரு கனவுபோல எங்கள் மனத்தில் பதிந்துவிட்டது. ஆனால் அதைவிட ஆச்சரியம் ஒன்று. இரண்டாம் முறை ஆட்சிக்குழுக் கூட்டம் கூடியவுடன், நடந்தவைகளைப் பற்றித் துணைவேந்தர் ஏதாவது சொல்லுவார் என்று எதிர்பார்தோம். ஒரு வார்த்தைகூட அவர் வாயிலிருந்து வெளிவரவில்லை. எங்களில் ஒருவர் இதுபற்றிப் பேச முனைந்தவுடன் “விட்டுத்தள்ளுங்க, சின்னப் பிள்ளைங்க, யாரோ தூண்டிவிடுறாங்க புள்ளைங்க உணர்ச்சிவசப்படுறாங்க. இதுக்கு நாம ஏன் மண்டையை உடைச்சுக்கணும்” என்று முற்றுப்புள்ளி வைத்துவிட்டுக் கூட்டத்தைத் தொடர்ந்தார். அந்த மாமனிதரின் வேறொரு பகுதி இது.

ராஜாஜி தமிழகத்தின் முதன்மந்திரியாக இருந்த சமயம், மாபெரும் கல்விக்கடலான தெ.பொ.மீயின் கல்வி, மாணவர்களுக்குப் பயன்பட வேண்டும் என்று நினைத்தார். நன்கு சிந்தித்துப் பார்த்து அவருடன் நேரே பேசாமல் திரு.வி.க.விடம் வந்தார். தமது விருப்பத்தைக் கூறி, “மாநிலக் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராக எப்படியாவது தெ.பொ.மீ.யை வர ஏற்பாடு செய்யுங்கள்” என்று கூறிவிட்டுச் சென்றார்.