பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



குருதேவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் ♦ 143



1920களிலிருந்தே பெருஞ் செல்வராக விளங்கிய தெ.பொ.மீ.யின் தந்தையார் பொன்னுசாமி அவர்கள், தம்முடைய பிள்ளைகள் எங்கும் போய்ச் சம்பளம் வாங்கிக்கொண்டு பணிபுரிவதை விரும்பவேயில்லை. இதை நன்கறிந்த திரு.வி.க. அவர்கள், தந்தையார் பொன்னுசாமி அவர்களைச் சந்தித்து, தெ.பொ.மீ.யின் கல்வி மாணவர்களுக்குப் பயன்படவேண்டும் என்பதை விரிவாக எடுத்துச் சொல்லி, ‘அவர் அந்தப் பணியை ஏற்றுக்கொள்ள நீங்கள் எப்படியாவது உத்தரவு தர வேண்டும்’ என்று வேண்டிக்கொண்டார். அப்பொழுது பெரியவர் பொன்னுச்சாமி கூறியது இன்னும் காதில் ஒலிக்கிறது. “பண்ற தப்பையெல்லாம் பண்ணிட்டு, இப்ப தமிழையே விக்கப் புறப்பட்டுட்டீங்களா? மாத ஊதியம் பெற்றுக்கொண்டு மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தால் அது தமிழை விக்கிறதாகாதா?" என்று கூறி முடித்தார். இறுதியாகத் திரு.வி.க. அவர்கள் பெரிதும் மன்றாடி அவரிடம் உத்தரவு வாங்கிவிட்டார். அது கிடைத்தவுடன் அரசாங்கத்தில் அவரை நியமனம் செய்வதற்குரிய கோப்புகள் சுழலத் தொடங்கி விட்டன.

இந்த நிலையில் அரசு மாறிவிட்டது. காமராசர் தமிழகத்தின் முதல்வராக ஆகிவிட்டார். தெ.பொ.மீ. பணியில் சேர்வதற்குமுன்பே தமிழாசிரியர்கள், தமிழ்ப்புலவர்கள் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் கூட்டம் திரண்டு எழுந்தது. மூட்டை மூட்டையாகக் குறைகூறும் மனுக்கள் தலைமைச் செயலகத்தில் குவிந்தன. எல்லாக் கடிதங்களிலும் ஒரே பல்லவிதான். ‘தெ. பொ. மீ என்பவர் தமிழ் வித்துவான் பரீட்சையில் தேறியிருக்கிறாரே தவிர, தமிழ் எம்.ஏ. (M.A.) பரீட்சைக்குச் செல்லவில்லை. தமிழில் எம்.ஏ. என்ற அடிப்படைத் தகுதி இல்லாத இவரை எப்படித் தமிழ்த்துறைத் தலைவராக ஆக்கினர்கள்? இது அடாத செயல்’ என்பதுதான் இக்கடிதங்களில் கண்ட செய்தியாகும்.