பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



குருதேவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் ♦ 145


பக்கங்களைப் புரட்டி விட்டுப் படித்து முடித்ததாக நூலைக் கீழே வைத்துவிடுவார். அவரோடு நெருங்கிப் பழகிய அவருடைய வழிமுறைகளை நன்கு அறிந்தவர்களுக்கு மட்டும் இந்த உண்மை விளங்கும். 'ஏக சந்தகிராகி' ஆகிய அவர் ஒரு முறை ஒரு நூலைப் புரட்டிவிட்டால், அப்புறம் அதில் சொல்லப்பட்டவை எல்லாம் அவருக்குச் சொந்தமாகிவிடுகின்றன. இந்த இந்த நூலின் இன்ன இன்ன பக்கத்தில் என்ன விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டால், அது அப்படியே இருத்தலை நான் பல சமயங்களில் கண்டதுண்டு. 1920இல் குருதேவருக்கு வயது 25. பொருளியல் பாடத்தில் அவர்கள் எம்.ஏ. படித்து விட்டுச் சட்டக் கல்லூரியில் பி.எல். பட்டப் படிப்பு முடித்து விட்டு வெளியே வந்தபொழுது அவருக்கு 24 அல்லது 25 வயது இருந்திருக்கும். தம்முடைய நேரம் முழுவதையும் கல்லூரிப் படிப்பில் செலவு செய்துவிட்டமையின் இவருக்குத் தமிழ் நூல்களைக் கற்கவோ ஆராயவோ நேரம் இருந்திருக்க முடியாது. தமது 26வது வயதில் ‘சேக்கிழாரும் திருக்கண்ணப்பரும்’ என்று தொடர்க் கட்டுரையாக வந்த நூலை இவர் வெளியிட்டார். அச்சில் 480 பக்கங்களுக்கு மேற்பட்டுள்ள இந்த நூலை ஒரே நேரத்தில் படித்து முடிப்பது என்பது யாருக்கும் இயலாத காரியம். ஒவ்வொரு பக்கத்திலும், அவர் சொல்லியுள்ள கருத்துக்களை மனத்தில் பதித்துக்கொள்ள வேண்டுமென்றால் இரண்டு மூன்று முறைக்கு மேல் அதில் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு பக்கத்திலும் அவ்வளவு விஷயங்கள் திணிக்கப்பட்டிருத்தலின் அதைப் படித்துப் புரிந்துகொள்வது இன்றும் சற்றுக் கடினமாகவே உள்ளது.

மதுரைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த தெ.பொ.மீ. அலுவல் நிமித்தமாகப் பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றிருந்தார். பிரெஞ்சு அரசாங்கத்தின் கல்வித்துறை அமைச்சரைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாயிற்று. அமைச்சரிடம் அழகான பிரெஞ்சு