பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



146 ♦ நான் கண்ட பெரியவர்கள்


மொழியில் பேசினார் தெ.பொ.மீ. அமைச்சரின் வியப்பிற்கு அளவேயில்லை. ‘உங்களுக்கு என்ன செய்யவேண்டும்?’ என்று விருப்புடன் கேட்டார் அமைச்சர். 'மதுரைப் பல்கலைக்கழகத்தில் பிரெஞ்சு மொழிப் பட்டப் படிப்பு வைக்க விருப்பம், ஆனால் எங்கள் பொருளாதாரம் இடந்தரவில்லை' என்றார் தெ.பொ.மீ. ஒரு பெருந் தொகையை முன்முதலீடாகத் தந்து, பிரெஞ்சு பயிற்றுவிக்கும் பேராசிரியர், அவருக்குரிய மாத ஊதியம், பிரெஞ்சு மொழி நூலகம் ஆகிய அனைத்தையும் உடனே ஏற்பாடுசெய்து, மதுரைப் பல்கலைக்கழகத்தில் பிரெஞ்சு மொழித் துறையையும் நடைபெற ஏற்பாடு செய்தார் அமைச்சர். இரண்டாம் நபருக்குத் தெரியாமல் தெ.பொ.மீ. பல்கலைக்கழகத்திற்குச் செய்த மாபெரும் தொண்டாகும் இது.

கல்வி, கேள்வி, மொழியறிவு ஆகியவற்றில் ஈடுஇணையில்லாத புலமை மிக்கவர் என்பது பலரும் அறிந்த ஒன்று. ஆனால், அவருக்குத் தெரிந்தோ தெரியாமலோ, அந்தத் தொடக்க காலத்திலிருந்தே அவருள் ஒன்று வளரத் தொடங்கி மிகப் பெரிதாக வளர்ந்து நின்றது. இந்த வளர்ச்சியைப் பலர் அறியாவிடினும் ஒரு சிலர் அறிந்து பயன்பெற்றனர் என்பதையும் நான் அறிவேன்.

குருதேவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராக இருந்த காலத்தில் ‘பி.சா.சு’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட பி. எஸ். சுப்பிரமணிய சாஸ்திரியார் வடமொழித் துறையில் தலைவராக இருந்தார். வடமொழி அல்லாமல் தமிழிலும் தமக்குப் பெருந்தகுதி உண்டு என்ற நினைவில் வாழ்ந்த அவர் தெ.பொ.மீ போன்றவர்களை மதிப்பதில்லை. மதியாதது மட்டுமன்று; சந்தர்ப்பங்களில் தரக் குறைவாகவும் பேசி விடுவார். ஒரு முறை சாஸ்திரி ஹாலில் கூடியிருந்த பெருங் கூட்டத்திடை சுப்பிரமணிய சாஸ்திரியார் பின்வருமாறு பேசினார்: “வக்கீல் படித்துவிட்டுக் கோர்ட்டுக்குப் போய்,