பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



குருதேவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் ♦ 153


முழுவதையும் வாய்பேசாமல் பார்த்துக்கொண்டு, என்னையே முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார் தெ.பொ.மீ. ஆத்திரம் அடங்காத நான் அவரைப் பார்த்து ‘என்ன குருதேவா என்ன முறைக்கிறீர்கள்?’ என்றேன். கொஞ்சம்கூட அதிர்ச்சியடையாமல் “அப்பா.....! 1932 இலிருந்து உன்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். உன்னைத் திருத்தவே முடியாது என்றுதான் நம்பியிருந்தேன். இப்பொழுது சிலகாலமாக, நீ கூடத் திருந்திவிடுவாய் என்ற எண்ணம் என்னுள் தோன்றி வளர்ந்தது. இப்பொழுது தெரிந்துகொண்டேன்; நாய்வாலை நிமிர்த்தினாலும் நிமிர்த்தலாம், அ.ச. என்பவனைத் திருத்தவே முடியாது. அப்பனே! மனத்தினாலும் பிறரை ஏசியதில்லை நான்; தீங்கு நினைத்ததுமில்லை. ஆனாலும், என்மேல் சினங்கொண்டு என்னை ஏசுகிறவர்கள், என்னைக் கேவலப்படுத்தித் துண்டுப் பிரசுரம் போடுகிறவர்கள் ஆகியவர்களை நீ கண்டதில்லையா? இவர்களை எதிர்த்து நான் ஒரு வார்த்தை பேசியதுண்டா? அவர்கள்மேல் சினங்கொண்டது உண்டா? ஆனால் நீயோ முன்கோபக்காரன். மேடையில்கூடப் பிறரை ஏசுபவன், உனக்கு விரோதிகள் இருப்பதில் வியப்பொன்றுமில்லை. ஆனால் நீ வளர்ந்தாயா?” என்று அவர் கூறியவுடன் என்னையும் அறியாமல் வழிந்த கண்ணீருடன் எழுந்து அவர்களுடைய திருவடிகளில் விழுந்து வணங்கி “இந்த விநாடிமுதல் என்னுடைய வாழ்க்கையை மாற்றிக்கொள்கிறேன்; தாங்கள் இட்ட கட்டளையை நிறைவேற்றுகிறேன்” என்று சபதம் செய்தேன்.

உடனே விழாக்காரரைப் பார்த்து, ‘நீங்கள் சொன்ன படியே ஏற்பாடு செய்யுங்கள். இவன் அந்தக் கதையை எழுதிய இதழாசிரியருடன் வருவான்; அவருடனேயே தங்கியிருப்பான்; அவர் தலைமையில் பேசுவான்; எக்காரணம் கொண்டும் பழைய அ.ச. தலைநீட்ட மாட்டான்’ என்று கூறினார்.