பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



158 ♦ நான் கண்ட பெரியவர்கள்


குருதேவருக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘என்னாபா? இது என்ன என் காலிலே விழறே எழுந்திருப்பா. நீ என்ன பண்னே? நான் எதுக்கு உன்னை மன்னிக்கணும்?’ என்று கூறிவிட்டார் அந்த ஆன்மீகப் பெரியார்.

மேல்மருவத்தூரில் நடைபெறும் பல வேள்விகளைக் குருதேவரைக் கொண்டு தொடங்கச் செய்தாள் அன்னை. நாட்கள் ஓடி மறைந்தன. திடீரென்று மதுரையிலிருந்த குருநாதருக்கு உடல்நிலை மிகவும் கெட்டுவிட்டது. டாக்டர் கபீர் தலைமையில் ஏழு மருத்துவர்கள் கூடி எல்லாச் சோதனைகளும் செய்து பார்த்து, அவரைப் பீடித்திருப்பது, ‘Filarial Fever’ என்ற முடிவிற்கு வந்தனர். ஓர் அறுவை சிகிச்சை செய்து, குணப்படுத்த முன்வந்தனர். ஆனால் குருதேவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அன்னையின் உத்தரவு வந்தாலொழிய , மருந்து, மாத்திரை, அறுவை சிகிச்சை எதையும் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று உறுதியாகச் சொல்லிவிட்டார். ஒரு நாள் இரவு ஏழு மணி இருக்கும். மதுரையிலிருந்து தொலைபேசியில் என்னை யாரோ அழைக்கிறார்கள் என்று அறிந்து, தொலைபேசிக்குச் சென்றேன். மறுமுனையில் குருதேவரின் மருமகன் பேராசிரியர் டாக்டர் சண்முகம் பேசினார். நடந்தவற்றையெல்லாம் கூறி, எப்படியாவது அன்னையிடம் உத்தரவு வாங்கி, தொலைபேசியில் சொல்லுங்கள். அதுவரை நான் காத்திருக்கிறேன் என்றார். தொலைபேசி அலுவலரிடம் எவ்வளவு நேரம் ஆனாலும் இந்த லைனைத் துண்டிக்காதீர்கள்’ என்று சொல்லிவிட்டு விழுந்தடித்து ஓடினேன். நேரே அருள்வாக்கு நடைபெறும் இடத்தில் நான் போய் நின்ற உடனேயே ‘என்னடா தலைவா, தாடிக்காரனுக்கு உடம்பு சரியில்லையா, அதைக் கேட்க வந்தாயா’ என்றாள் அன்னை. சண்முகம் சொன்னதையெல்லாம் கூறிவிட்டு, ஏழு டாக்டர்களும்