பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


1. தந்தையார்


என் தந்தையார் பெயர் ‘பெருஞ்சொல் விளக்கனார்’ அ.மு.சரவணமுதலியார் என்பதாகும். தாய் சிவகாமி அம்மையார். தந்தையார் தமிழ், இலக்கிய, இலக்கண அறிவு மிகுதியாக நிரம்பப் பெற்றவர். தாமே பயின்ற சிறப்பும் உடையவர். அரசங்குடியை அடுத்துள்ள லால்குடி என்ற ஊரில் 1925முதல் 1930வரை ஜவுளிக்கடை வைத்திருந்தார். அந்தக் கடையில் இருந்தபடியே இவர் தமிழ் அறிவை வளர்த்துக்கொண்டார். பிறகு 1930-க்குமேல் அப்பொழுது திருச்சி மாவட்ட போர்டு தலைவராக இருந்த திருவாளர் டி.எம். நாராயணசாமிப் பிள்ளையவர்கள் தந்தையாருடைய கல்வியறிவு வீணாகப் போவதை உணர்ந்து, அவரை லால்குடி போர்டு உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக நியமித்தார். தந்தையாரவர்கள் தம் பேச்சுத் திறன், கல்விச் சிறப்பு இவற்றால் தமிழகமெங்கும் சென்று சொற்பொழிவாற்றும் வாய்ப்புப் பெற்றிருந்தார். அதுமட்டுமல்லாமல் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பர்மா முதலிய இடங்கட்கும் சென்றுவந்துள்ளார்.

அவரிடத்தில் மிக இளமையிலேயே தமிழ் கற்கும் வாய்ப்பைப் பெற்றேன். அதுமட்டுமன்று, அவர் ‘படிக்க வேண்டும்’ என்று எனக்குக் கட்டளை இட்டபொழுது ஒரு குறிப்பையும் கூறினார். ‘திருக்குறள் முதல் எந்த நூலாக இருப்பினும் அதன் உரையைப் படிக்கக்கூடாது’ என்பது அவரது முடிவான கருத்தாகும். உரையைப் படிக்கக் கூடாது என்பதற்கு ஒரு தக்க காரணமும் இருந்தது. உரையைப் படித்துவிட்டால் ஒரே மாதிரியாகத்தான்