பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162 ♦ நான் கண்ட பெரியவர்கள்


குறைக்க முடியாதா?’ அதற்கு அன்னை கூறிய பதில், குருதேவர் எவ்வளவு பெரியவர் என்பதை உணர்த்திற்று. ‘இந்த நோயை அவனுக்குக் கொடுத்தவளே நான்தான். ஒரே வினாடியில் அவன் துன்பத்தையெல்லாம் போக்கிவிட முடியும். ஆனால் ஒரு சிக்கல், இனி அவனுக்குப் பிறவி கிடையாது. இந்தத் துன்பத்தை உரிய காலம் முடிய அவன் அனுபவிக்காவிட்டால் இதற்காக ஒரு பிறவி ஏற்க நேரிடும். அவனுக்கே இது நன்றாகத் தெரியும். அவன் என்னிடம் என்ன வேண்டிக் கொண்டான் தெரியுமா? ‘தாயே, கொடுக்கிற துன்பத்தையெல்லாம் கொடுத்திடு. அனுபவித்துக் கணக்கைத் தீர்த்துவிடுகிறேன். இதில் மிச்சம் வைத்து அதற்காக ஒரு பிறவி தேவையில்லை’ என்று கூறிவிட்டு, அவனே இதனை ஏற்றுக்கொண்டான். நீ கவலைப் படுவதில் பயனில்லை’ என்று கூறிவிட்டாள், அன்னை. ஆம் இது கடைசிப் பிறவி என்பதை முன்கூட்டியே உணர்ந்து அனுபவிக்க வேண்டியதையெல்லாம் அனுபவித்து, கணக்கைத் தீர்த்துவிட வேண்டும் என்று வேண்டிக்கொண்ட மாமனிதர் தெ.பொ.மீ. பண்பாட்டிலும் மாமனிதர். ஆன்மீகத்திலும் மாமனிதர்.

தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரைப் பன்மொழிப் புலவர் என்றும் பல்கலைச் செல்வர் என்றும் இவ்வுலகம் நன்கு அறியும். ஆனால், இந்தத் தெ.பொ.மீ.க்குள் மற்றொரு தெ.பொ.மீ மலைபோல் வளர்ந்து நின்றதை உலகம் அறியாது. அன்னை அறிந்திருந்தாள், அவள் சொல்ல நானும் கண்டேன்.