பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


22. வள்ளல் ம. வே. ஜெயராமன்


இந்த அன்பரிடம் நான் பழகியது நான்கே ஆண்டுகள்தான். திருப்பனந்தாளை ஒட்டிய சிற்றுாரில் பிறந்த இவர், மிக எளிய பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். திருப்பனந்தாள் தமிழ்க் கல்லூரியில் வித்துவான் பயின்று பட்டம் பெற்றார். நல்ல இசையறிவும் இசைப் பயிற்சியும் உடையவர். வித்துவான் பட்டம் பெற்றிருந்தும் நண்பருக்குத் தமிழகத்தில் எங்கும் வேலை கிடைக்கவில்லை. ஒரு தமிழாசிரியர் வேலையை நாடிப் பெங்களூர் சென்றார். அங்கு அவருடைய வாழ்க்கை திசை திரும்பியது. பங்களூரில் தமிழர்கள் சிறுபான்மையராதலால் சிறுபான்மையினருக்குரிய உரிமையில் ஓர் ஆசிரியப் பயிற்சிப் பள்ளியைத் தொடங்கினார். அதிர்ஷ்ட தேவதை முழுவதுமாக அவர் பக்கம் திரும்பினாள். பொறியியல் கல்லூரி முதல் பல்வேறு கல்லூரிகளை நிர்மாணித்த இவர் பெருங் கோடீஸ்வரராக ஆனார். என்றாலும், திருப்பனந்தாளையோ, தாம் பயின்ற கல்லூரியையோ, திருப்பனந்தாள் மடாலய அதிபரையோ இறுதிவரை மறக்கவேயில்லை. தம் உடன் பயின்ற தமிழ் ஆசிரியர்கள் அங்கங்கே ஆசிரியப் பணி செய்து வந்தார்கள் என்பதை அறிந்து, அவர்களைக் காணும்போதெல்லாம் வாரி வாரி வழங்கினார். ஒவ்வோர் ஆண்டும் ஒரு கோடி ரூபாய்குக்குமேல் இப்படி வழங்கினார். பல நிறுவனங்கள், பல கல்லூரிகள், பலர் இந்த வள்ளன்மையைப் பயன்படுத்திக் கொண்டனர்.

திருப்பனந்தாள் காசி மடத்திற்கு அடிக்கடி செல்லும் நான் இவற்றைப்பற்றி நிரம்ப அறிந்திருந்தேன். ஆனால்,