பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164 ♦ நான் கண்ட பெரியவர்கள்


1988 ஜூலை மாதம்வரை இவரைப் பார்க்கவோ பழகவோ எனக்கு வாய்ப்பு ஏற்பட்டதேயில்லை.

இந்தக் கால கட்டத்தில், திருப்பனந்தாள் அதிபருக்கும் ம.வே.ஜெயராமனுக்கும் ஏதோ ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட, ஜெயராமன் மடத்திற்குச் செல்வதையே நிறுத்தி விட்டார். ஆனால், இவருடைய வருகை மடத்திற்கு அதிகம் தேவைப்பட்டது. எனவே, திருப்பனந்தாள் காசி மடத்து அதிபர் ஸ்ரீ முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் அவர்கள் 1988இல் சென்னைக்கு வந்திருந்தபொழுது என்னைத் தொலைபேசியில் அழைத்தார். ‘என்ன காரணத்தாலோ, ஜெயராமன் மடத்திற்கு வருவதை நிறுத்திவிட்டார். நீ அவருக்கு ஒரு கடிதம் எழுதி அவரை அங்கு வருமாறு செய்’ என்றார். முன்பின் தெரியாத ஒருவருக்கு நான் எப்படிக் கடிதம் எழுதுவது? அதுவும் ‘நீங்கள் மடத்துக்குச் செல்ல வேண்டும்’ என்ற சிபாரிசை முன்பின் தெரியாத ஒருவருக்கு எவ்வாறு செய்வது? என்றேன். மடத்து அதிபர் ‘நீ அவரைப் பார்த்திராவிட்டாலும், உன்மேல் அளவு கடந்த அன்பும், மரியாதையும் வைத்திருக்கிறார். நீ உடனே எழுது’ என்றார். அவ்வாறு எழுதினேன். மறுநாள் என் கடிதம் கிடைத்தவுடன் தொலைபேசியில் என்னை அழைத்து, எல்லையற்ற தம் மகிழ்ச்சியைத் தெரிவித்து விட்டு, ‘இன்று மாலையே விமானம் மூலம் சென்னை வருகிறேன். உங்களைச் சந்திக்கிறேன்’ என்றார். அன்றிரவு வீட்டிற்கு வந்தார். நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். பல ஆண்டுகளாக என்னைச் சந்திக்க அவர் விரும்பியதாகவும் அவர் உடனிருந்த அன்பர்கள் அதற்கு எப்படியெல்லாம் முட்டுக்கட்டை போட்டார்கள் என்பதையெல்லாம் விரிவாகச் சொன்னார். நான் முரடன் என்றும், யாரையும் சட்டை செய்பவன் அல்லன் என்றும் அவர் என்னைச் சந்திப்பது சிறிதும் பொருந்தாது என்றும் கூறித் தடுத்துவிட்டார்களாம்.