பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வள்ளல் ம.வே.ஜெயராமன் ♦ 167




ஆராய்ச்சி மையம் என்ற பெயரில் ஓர் அறக்கட்டளையை நிறுவுவது என்று முடிவு செய்தோம். இவற்றிற்கெல்லாம் நான்கு லட்ச ரூபாய் தேவைப்படும். அதனை எப்படி வசூல் செய்வது என்று பேசிக்கொண்டிருக்கையில் நண்பர் ஜெயராமன் குறுக்கிட்டு ‘யாரிடமும் போய் எதையும் கேட்கவேண்டாம். இது ஒரு பெருந்தொகையன்று. நானே போட்டுவிடுகின்றேன்’ என்று சொல்லி, அவர் கையிலிருந்த ஒரு லட்சத்து இருபதினாயிரம் ரூபாயை உடனே எடுத்துக் கொடுத்துவிட்டார். ‘எப்பொழுது பணம் தேவையோ, அப்பொழுது சொல்லுங்கள். ஒரே நாளில் உங்கள் கையில் வந்து சேர்ந்துவிடும்’ என்றார். மிக்க மகிழ்ச்சியோடு கலைந்து சென்றோம்.

1993 மே மாதம் முதல் வாரத்தில் திருக்கோயிலுரரில். ‘திருகோவலூர் பண்பாட்டுக் கழகம்’ என்ற பெயரில் ஆண்டுதோறும் ஒரு மாபெரும் விழாவை நண்பர் தியாகராஜன் நடத்தி வந்தார். ஒவ்வோர் ஆண்டும், கபிலர் விருது’ என்ற பெயரில் இரண்டு பெருமக்களை அழைத்து விருது தந்து சிறப்புச் செய்வார்கள். 1993 மே மாத விழாவில் நண்பர் ஜெயராமனுக்கு அந்த விருதைத் தருவதாக முடிவு செய்தார். மே 3ஆம் தேதி விருது கொடுக்கும் விழா, நானும் விழாவிற்குச் சென்றிருந்தேன். விழா முடிந்து ஒரே காரில் நண்பர் ஜெயராமன், தண். கி. வேங்கடாசலம், நான் ஆகிய மூவரும் சென்னை திரும்பினோம். மறுநாள் நண்பர் ஜெயராமனும் வேங்கடாசலமும் பங்களூருக்குப் புறப்பட்டனர். தம்முடைய மகளாரையும் ஜெயராமன் உடன் அழைத்துச் சென்றார். காரில் உட்லண்டஸிலிருந்து விமான நிலையம் செல்லும் வழியில் கத்திபாரா பகுதியில் கார் செல்லும்பொழுது பேசிக்கொண்டிருக்கும்பொழுதே எதிர்பாராமல் மரணமடைந்த அந்த மாமனிதரின் ஆசியால் சேக்கிழார் ஆராய்ச்சி மையம் நீதியரசர் எஸ். நடராஜன் அவர்களைத் தலைவராகக் கொண்டு சிறப்பாகப் பணி புரிந்துவருகிறது.