பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


23. எஸ்.எஸ். வாசன்


திறனாய்வுபற்றிக் கட்டுரைகள் எழுதுவதற்கு கி.வா.ஜ. பெரும் தூண்டுதலாக இருந்தார் என்பது உண்மை. திறனாய்வுத் துறையில் அதிகம் ஈடுபட ஈடுபட, அந்தப் புதிய கண்ணோட்டத்தில் பழைய தமிழ் இலக்கியங்களைப் பார்த்து அவைபற்றி எழுதவேண்டுமென்ற நினைவு 1944இல் மெள்ளத் துளிர்க்கலாயிற்று. அப்பொழுது கம்பனில் அதிகம் ஈடுபட்டுப் பயின்றுகொண்டிருந்தமையின் இந்தத் திறனாய்வுக் கண்ணோட்டத்தை முதன் முதலாகக் கம்பனில் செலுத்தினேன். அதன் விளைவுதான் 1947இல் வெளிவந்த ‘இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்’ என்ற நூலாகும். இதுவே என்னுடைய முதல் நூலுமாகும்.

இந்நூல் வெளிவந்தவுடன் ஓகோ என்று போற்றியவர்களும், நான் திராவிடக் கழகத்தில் சேர்ந்துவிட்டேன் அதனாற்றான் இராவணனை உயர்த்தி எழுதியுள்ளேன் என்று தூற்றியவர்களும் இருந்தனர். இந்நூலின் தரம் எப்படியிருந்தாலும், அதன் நடை தமிழ் நடையாக இல்லை என்பதை என் தந்தையார் முதலில் உணர்த்தினார். ஆங்கிலத் திறனாய்வு நூல்களில் எந்நேரமும் மூழ்கியிருந்த காரணத்தால் ‘இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்’ என்ற நூலின் நடை தமிழ் நடையாக இல்லை என்பதை உணரத்தொடங்கினேன். அடுத்தடுத்துக் கம்பநாடன் காப்பியத்திலிருந்து இத்திறனாய்வு நோக்கோடு எழுதப்பட்டவை ‘நாடும் மன்னனும்’, ‘அரசியர் மூவர்’, ‘தம்பியர் இருவர்’ என்ற மூன்று நூல்களுமாகும்.