பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எஸ்.எஸ்.வாசன் ♦ 169





இந்த மூன்று நூல்களும் அடுத்தடுத்து வருவதற்கு ஒரு காரணமுண்டு. திராவிடக் கழகத்தார் பலர் கம்பனைப் படிக்காமலேயே அதனை எரிக்க வேண்டும் என்று போராடிய காலம் அது. அதன் எதிர்ப்பாகவே இந்த மூன்று நூல்களும் எழுதப்பெற்றன. என்றாலும் என் தமிழ் நடை கடினமானதாகவே இருந்துவந்தது.

இந்த நிலையில் எதிர்பாராத ஒரு நிகழ்ச்சி நடந்தது. அப்பொழுது இராயப்பேட்டையில் ‘பசார் ரோட்டில்’ உள்ள ஒரு சிறுவீட்டின் மாடியில் குடியிருந்தேன். எதிர்பாராமல் ‘ஆனந்த விகடன்’ ஆசிரியர் திரு.எஸ்.எஸ். வாசன் அவர்கள் வீட்டுக்கு வந்துசேர்ந்தார். அவர் என்னை நாடிவந்த காரணம் புரியவில்லை என்றாலும், அன்புடன் வரவேற்று வந்த காரணத்தை மெள்ள வினவினேன். “திருக்குறளை அடிப்படையாக வைத்துக் கொண்டு ஒரு இருபது அல்லது முப்பது கட்டுரைகள் எழுதித்தர வேண்டும்” என்று கேட்டார். அந்தக் கால கட்டத்தில் ‘ஆனந்த விகட’னில் வரும் கதைகள் கட்டுரைகள் பெரும்பாலும் பிராமண சமூகத்தினரின் பேச்சு நடையாகவே இருக்கும். அந்த முறையில் என்னால் எழுதமுடியாது என்பதை அவரிடம் பணிவுடன் தெரிவித்துக்கொண்டேன். அவரோ விடுவதாக இல்லை. சொற்பொழிவுக்குப் போகின்ற நான் கூட்டத்தாரின் திறத்திற்கேற்ப எளிய நடையில் பேசுவதை எடுத்துக்காட்டி ‘எழுத்து நடையும் அதுபோல் இருக்க வேண்டும்’ என்று பிடிவாதமாகச் சொன்ன பிறகு, எழுத ஒருவாறு ஒப்புக் கொண்டேன்.

புறப்பட்ட திரு.வாசன் அவர்கள் வாயிற்படியில் நின்றுகொண்டு சொன்ன வார்த்தைகள் என்னுடைய எழுத்துநடை முழுவதையும் மாற்றிவிட்டது. 1949க்குப் பிறகு எழுத்துநடை முழு மாற்றம் பெற்றது. அதன் பிறகு எழுதப் பெற்ற முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களில் இந்தப் புதிய நடையே பயன்பட்டுவருகிறது. இந்த மாபெரும்