பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170 ♦ நான் கண்ட பெரியவர்கள்


திருப்பத்தை நான் பெற உதவியவர் திரு. எஸ்.எஸ்.வாசன் அவர்களே ஆவார். இன்று என்னுடைய நூல்கள் ஆறு ஏழு பதிப்புக்கள் என்று வரும்பொழுது திரு. வாசன் அவர்களை நினைக்காமல் இருக்க முடியவில்லை.

இந்தப் பெருமாற்றத்தைச் செய்ய அவர் என்ன கூறினார் என்பதை இன்றும் நினைவில் வைத்துள்ளேன். வாயிற்படி அருகில் நின்ற அவர். “அ.ச.! ஆனந்த விகடனை யார் அதிகம் படிக்கிறார்கள் என்று தெரியும், உங்களுக்கு பெரும்பாலும் அதில் வரும் கதைகளை அனைவரும் படிக்கிறார்கள், இலக்கியத் தொடர்புடைய கட்டுரைகளை ஒருசிலரே படிப்பார்கள். குடும்பத்தலைவிகள் சோறு வெந்தவுடன் கஞ்சியை வடிப்பதற்காகச் சோற்றுப் பானையைச் சரித்து வைத்துவிட்டுக் கஞ்சி வடிகின்ற நேரம் காத்திருக்கும்போது ஆனந்த விகடனைப் படிப்பார்கள். அந்தப் பெண்களுக்குப் புரியும் வகையில் உங்கள் கட்டுரை அமைய வேண்டும். எழுதி அனுப்புங்கள்!”, என்று சொல்லிவிட்டுப் போனார். குறள் கண்ட வாழ்வு’ என்ற தலைப்பில் பல கட்டுரைகள் ஆனந்தவிகடனில் தொடர்ந்து எழுதினேன். பின்னர் அது நூலாகவும் வந்தது. என்னுடைய எழுத்து நடையில் நிகழ்ந்த பெருமாற்றத்திற்குக் காரணமாக அமைந்தவர், திரு. எஸ்.எஸ். வாசன். அவர் வேண்டுகோளின் பயனே ‘குறள் கண்ட வாழ்வு’ என்பது.

சோம்பித் திரிந்த என்னை எழுதுமாறு பணித்தவர் கி.வா.ஜ. என்றால், கடபுட நடையில் எழுதிக் கொண்டிருந்த என்னை எல்லோருக்கும் புரியும் இலகு நடையில் எழுதுமாறு தூண்டியவர் எஸ்.எஸ்.வாசன் அவர்களே ஆவார்.