பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


24. சர். கந்தையா வைத்தியநாதன் (இலங்கை)


1938ல் மாணவனாக இருக்கும்பொழுதே நாவலர் ந.மு.வே.நாட்டாருடன் கொழும்பு தமிழ்ச் சங்கக் கூட்டத்திற்குச் சென்றேன். அதன் பிறகு, 1990 வரை 25 முறைகள் இலங்கைக்குச் சென்றுவந்துள்ளேன். நூற்றுக் கணக்கானவருடன் பழகினேன். ஒரு சிலருடன் நெருங்கியும் பழகினேன். ஆனாலும், சர் கந்தையா வைத்தியநாதனைப் போன்ற ஒருவரை இந்தப் பெரிய தீவில் காண்பது கடினம். 1945இல் விமானம் மூலம் கொழும்பு வந்திறங்கினேன். இரட்டை விசிறிகள் உடைய டகோடா விமானம் அது. என்னை அல்லாமல் 10-12 பேர் விமானத்தில் இருந்தார்கள். அந்தக் காலங்களில் நான் புஷ்கோட் என்று சொல்லப்படும் அரைச்சட்டையை அணிவது வழக்கம். ஏனைய பயணிகளோடு நானும் சேர்ந்து இறங்கி, அரசியல் சம்பிரதாயங்களுக்காக நின்று கொண்டிருந்தேன். சர். கந்தையாவின் தலைமையில் என்னை வரவேற்பதற்காகப் பத்துப் பேர் வந்திருந்தார்கள். அரசியல் செல்வாக்குக் காரணமாக, அவர்கள் பத்துப் பேரும் புறத்தே நில்லாமல், நான் இருக்கும் இடத்திற்கே வந்து விட்டனர். நிற்கின்ற பயணிகள் அனைவரையும் ஏற இறங்கப் பார்ப்பதும் ‘நீங்கள்தான் ஞானசம்பந்தனோ?’ என்று கேட்டுக்கொண்டிருந்தனர். ஆறு ஏழு பேர்களைக் கேட்ட பின்னரும் என்னிடம் யாரும் வருவதாக இல்லை. இந்நிலையில் கூட்டத்திலிருந்த ஒருவர் என்னைச் சுட்டிக்காட்டி ‘அவரைக் கேட்கலாமா’ என்றார். அதற்குத் தலைவராக இருந்த ஒருவர் ‘யாழ்ப்பாணத்திற்குரிய ஒருவன் இந்தியாவுக்குப் படிக்கப் போய்த் திரும்பி