பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176 ♦ நான் கண்ட பெரியவர்கள்


இல்லாத அவர் உடம்பின் மேற்பகுதியில் இருந்த வாயிலிருந்து முதலில் தோன்றிய சொற்கள் ‘ஐயா, என்னைத் தெரிகிறதா உங்களுக்கு?’ என்பதாம். ‘மன்னிக்க வேண்டும், ஐயா, தெரியவில்லை’ என்றேன். ‘சரி, ஐயா, சி.வை.தாமோதர் பிள்ளை என்றால் தெரியுமோ?’ என்றார். ‘ஐயா, நான் ஒரு தமிழ் மாணவன். தாமோதரனாரைத் தெரியாத தமிழன் தமிழனே அல்லன்; அக்காலத்தில் தமிழ்த் தொண்டாற்றிய மாபெரும் தலைவர்களுள் தாமோதரனார் ஒருவராயிற்றே! அவரைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன். நான் மிகச் சிறு பாலகனாக இருந்த காலத்திலேயே அப்பெரியார் மறைந்துவிட்டார்’ என்று கூறியவுடன் கிங்ஸ்பரி (Kingsbury)-இன் முகம் மலர்ந்தது. “ஐயா, அவருடைய மகன்தான் நான்” என்று கூறியவுடன் என்னையும் அறியாமல் எழுந்து நின்று அவருடைய திருவடிகளைத் தொட்டு வணங்கினேன். பிறகு அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு பெட்டியிலிருந்து என் திருவாசகப் பேச்சு வெளிவந்தது. அந்த ஒலிக்கம்பி பேசிக்கொண்டிருக்கும்பொழுதே கிங்ஸ்பரி அவர்கள் ‘உங்கள் ஒவ்வொரு சொற்பொழிவையும் இருமுறை போட்டுக் கேட்பேன். அதனால்தான் உங்களைக் காணப் பிரியப்பட்டேன்’ என்றார். அக்காலத்தில் மேலை நாட்டிலிருந்து வந்த ஜியூ போப், இலங்கையைச் சேர்ந்த சி.வை.தாமோதரனார், அருள்தந்தை கிங்ஸ்பரி, தமிழகத்து வேலூரைச் சேர்ந்த, க.ப.சந்தோஷம் ஆகியோர் தீவிரக் கிறித்துவர்கள் ஆயினும் திருவாசகத்தில் தம்மை மறந்தனர். இம்மூவரில் பின்னுள்ள இருவரையும் கண்டு பேசும் வாய்ப்பைப் பெற்றவன் நான். நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு விரைவில் வந்து காணுவதாகச் சொல்லி அவரிடம் பிரியாவிடை பெற்று வந்தேன். ஆனால் ஆண்டவன் வேறுவிதமாக முடிவு செய்துவிட்டான். நான் அந்தப் பெரியாரைத் தரிசித்த நான்காம் நாள் அவர்