பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8 ♦ நான் கண்ட பெரியவர்கள்


அப்பொழுது எனக்கோ என் தந்தையாருக்கோ அவரைப் பற்றி அதிகம் தெரியாது. ஒரு நாள் பக்கத்திலுள்ள நோயாளியைப் பார்த்து டாக்டர். ஆர்.எஸ். அவர்கள் “செட்டியாரே, பயப்படாதீர்கள். உங்களைச் செளக்கியப் படுத்தி ஊருக்கு அனுப்புவது என் பொறுப்பு” என்று கூறினார். அப்பொழுது தந்தையார் மருத்துவமனையில் சேர்ந்த மூன்றாவது நாள். திடீரென்று தகப்பனார் சிரித்து விட்டார். டாக்டருக்குப் பின்னால் 20,30 இளம் மருத்துவர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். “என்ன கிழவனாரே, ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று கேட்டு விட்டார், டாக்டர். எனக்கும் டாக்டர் தியாகராஜனுக்கும் சிறிது அச்சம். என் தந்தையார் யாரையும் சட்டை செய்யாமல் கொஞ்சம் முரட்டுத்தனமாகவே பேசக்கூடியவர் என்பதால் என்ன நேருமோ என்றிருந்தோம். தந்தையார் முதலில் “ஒன்றுமில்லை” என்று மறுத்தாலும், டாக்டர். ஆர்.எஸ். அவர்கள் திருப்பித் திருப்பிக் கேட்க, “கோபப்படவேண்டாம், நீங்கள் பக்கத்திலுள்ள நோயாளியைப் பார்த்துக் கவலைப்படாதே, உன்னைச் செளக்கியப்படுத்தி அனுப்புவது என் பொறுப்பு என்று கூறியவுடன் இராமகிருஷ்ணருடைய கதை ஒன்று என் நினைவுக்கு வந்தது. அதுதான் சிரித்துவிட்டேன்” என்றார். ‘அது என்ன கதை’ என்று டாக்டர் கேட்க, தந்தையார் பகவான் இராமகிருஷ்ணரின் கதையைக் கூறினார். ஒரு மருத்துவர் நோயாளியைப் பார்த்து, “உன்னைச் செளக்கியப்படுத்துகிறேன் என்று சொல்வதைக் கேட்டு ஆண்டவன் சிரிக்கிறான், என்னுடைய வேலையை நீ எப்பொழுதப்பா எடுத்துக்கொண்டாய் என்று, இரண்டாவதாக ஆண்டவன் சிரிப்பது அண்ணன் தம்பி என் நிலம், உன் நிலம் என்று சண்டை போட்டுக் கொள்ளும்பொழுதாகும். உனக்குரியது 3-க்கு 6-அடிதானே, எதற்குச் சண்டை போட்டுக்கொள்கிறீர்கள்-என்று