பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சர். கந்தையா வைத்தியநாதன் (இலங்கை) ♦ 179


முறை சென்று பாஸ்போர்ட்டைக் கொடுத்து, பணத்தையும் கட்டிவிட்டு வந்தால் மாலையில் அதைப் பெற்றுக்கொள்ளலாம். கந்தையாவின் செல்வாக்குக் காரணமாக, ஹை கமிஷன் அலுவலக வண்டி வீடு தேடி வந்து விஸா விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து விஸாவையும் கொண்டுவந்து கொடுத்துவிட்டது. அலுவலகத்திற்கு ஒரு வாரம் விடுமுறை போட்டுவிட்டுக் கொழும்பு சென்றேன். வழக்கம்போல் விமான நிலையம் வந்திருந்த கந்தையா அவர்கள் அன்று மாலையே புகை வண்டி மூலம் யாழ்ப்பாணம் சென்று, திருக்கேதீச்சுரம் போகலாம் என்றார்கள். சரி என்று ஒத்துக்கொண்டேன். மாலையில் புகைவண்டிப் பயணச்சீட்டு எடுக்கும் இடத்தில் கந்தையா அவர்கள், அவருடைய மனைவியார், நான் ஆகிய மூவரும் நின்றுகொண்டிருந்தோம். கந்தையாவின் செயலாளர் டிக்கட் வாங்குவதற்காக முதலில் மூன்றாம் வகுப்பு டிக்கட் கொடுக்கும் இடத்தில் சென்று நின்றார். எனக்கு ஆச்சரியம். பெருஞ்செல்வரும், மிகப் பெரும் பதவி வகித்தவரும் ஆகிய கந்தையா மூன்றாம் வகுப்பில் பயணம் செய்யத் தொடங்கிவிட்டாரே என்று எனக்குள் வியந்து கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் அந்தச் செயலர் திடீரென்று முதல் வகுப்பு டிக்கட் கொடுக்கும் இடத்தில் நுழைந்தார். நான் வேகமாக ஓடிச்சென்று அந்தச் செயலரை அழைத்து ‘முதலில் அங்கே நின்றீர்கள்; இப்போது இங்கே நிற்கிறீர்களே’ என்று கேட்டேன். அதற்கு அவர் தந்த விடை எனக்கு அதிர்ச்சியைத் தந்தது. ‘திருக்கேதீச்சுரத் திருப்பணி தொடங்கிய நாளிலிருந்து ஐயா அவர்கள் முதல் வகுப்பில் பயணம் செய்வதில்லை. அவரே அப்படிச் செல்வதால் அம்மா அவர்களும் அவரைப் பின்பற்றத் தொடங்கிவிட்டார்கள். ஆகையால் அவர்கள் இருவருக்குமே மூன்றாம் வகுப்பு டிக்கட் எடுத்துக்கொண்டு, உங்களுக்கு முதல் வகுப்பு டிக்கட் பெற நிற்கின்றேன்’