பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சர். கந்தையா வைத்தியநாதன் (இலங்கை) ♦ 181


வேண்டும்” என்று திருப்பித் திருப்பி அதையே சொன்னார். இதனைச் சொல்லும் பொழுது அவர் அவராக இல்லை. சாமி வந்ததுபோல் பேசினார். திடீரென்று பழைய நினைவுக்கு வந்துவிட்டார். அவருடைய மனைவியாருக்கும் இது புரிந்திருக்க வேண்டும். எனவே, அவர் சாதாரண நிலைக்குத் திரும்பியவுடன் இதைப்பற்றிய பேச்சையே நாங்கள் இருவரும் பேசவில்லை. வேறு திசையில் எங்கள் பேச்சுத் திரும்பியது. மறுநாள் “திருச்செல்வம் அவர்கள் திருக்கேதீச்சுரம் வரப் போகிறார் அவருக்கு விருந்து வைக்க வேண்டும்” என்று கந்தையா அவர்கள் கூறியவுடன், உணவுடன் லட்டு போடலாம் என்று முடிவு செய்தார்கள். உடனே ஒருவரை அழைத்து லட்டு செய்ய ஏற்பாடாயிற்று. பூந்தி தயாரானவுடன் அந்தப் பணியாளர், கந்தையா, அம்மையார், நான் ஆகிய நால்வரும் லட்டுப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டோம். இரவு 7 மணிக்குள் லட்டுப் பிடிக்கும் பணி முடிந்துவிட்டது. லட்டுப் பிடிக்கும்பொழுதே வேண்டுமான அளவு கந்தையாவும் நானும் அள்ளித் தின்றோம். இரவு படுத்துவிட்டோம்.

அக்காலத்தில் ப்ராஸ்டேட்டால் (Prostate) அவதிப்பட்டேன். ஆதலால் இரவில் இரண்டு முறையாவது சிறுநீர் கழிக்க எழுந்து செல்வேன். விடியற்காலை 4 மணி இருக்கும். தங்கியிருந்த இடத்திலிருந்து 15 அடி தூரத்தில் இரண்டு கழிப்பறைகள் இருந்தன. நான் செல்லும்பொழுது ஓரடி முன்னால் கந்தையா செல்வது தெரிந்தது. இதில்கூட நம் ஒற்றுமையைப் பார்த்தீர்களா என்று சொல்லிக் கொண்டே ஓர் அறையில் நான் புகுந்தேன். என் பணியை முடித்து நான் வெளியே வந்தபிறகு கந்தையா அவர்கள் கழிப்பறைக் கதவைக்கூட மூடாமல் உள்ளே நின்று கொண்டிருப்பது தெரிந்தது. அவருடைய பண்பை அறிந்த எனக்கு இது ஓர் அதிர்ச்சியைத் தந்தது. “என்ன கந்தையா,