பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186 ♦ நான் கண்ட பெரியவர்கள்



கூட்டத்தினர் சிவபுராணம் சொல்ல ஆரம்பித்தனர். அது முடிகின்றவரை ஒன்றும் நடைபெறாது. பிரதமரின் பக்கத்தில் நான் நின்றுகொண்டிருந்தேன். “இந்த முறை நீங்கள் வருவதற்குக் காரணம் என்ன தெரியுமா?” என்று கேட்டார். “தெரியாது, ஒரு முக்கியமான விஷயமாக நான் அவசியம் வரவேண்டும் என்று தங்கள் நண்பர் பிடிவாதமாகச் சொன்னதால் வந்தேன்” என்றேன். “இன்று இந்தக் கொடுமை நடந்திராவிட்டால் இன்று காலை நாம் மூவரும் என் வீட்டில் உணவு அருந்திக் கொண்டிருப்போம். அமைச்சராக வரவேண்டும் என்று எவ்வளவு நான் சொல்லியும் நண்பர் மறுத்துவிட்டார். ஏதாவது ஒரு பணி கண்டிப்பாக அவர் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டவுடன் தமிழ் நாட்டின் இந்து சமய அறநிலைய அமைப்பு இருப்பதுபோல இங்கேயும் ஒன்றை அமைக்க வேண்டும்; அதன் தலைவராக வருபவர் இந்துக் கோயில்கள், புத்த தேவாலயங்கள் ஆகிய அனைத்தையும் நிர்வாகம் செய்பவராக இருக்க வேண்டும். அப்படி ஒரு பதவியை உண்டாக்கித் தந்தால், நான் அதில் பணி புரிகிறேன்” என்று கூறியதோடு நிறுத்தாமல், என்னுடைய நண்பர் தமிழக அரசில் பணிபுரிகின்றார்; அவர் வந்தால் விவரமாக எடுத்துக்கூறுவார் என்று கூறி நீங்கள்தான் அந்த நண்பர் என்று கூறினார். அதனால்தான் இந்த வரவழைப்பு. ஆனால் விதி வேறுவிதமாக விளையாடிவிட்டது” என்று கூறினார். முக்கியமான சமாசாரம் என்று நண்பர் கூறியதன் பொருளை அப்பொழுதுதான் புரிந்துகொண்டேன்.

நாங்கள் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருக்கும் பொழுது கந்தையாவின் இளையமகன் அங்கே வந்து பிரமதரிடம் சிங்கள மொழியில் ஏதோ பேசினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் பிரதமர்மட்டும் ‘ஹாம், ஹாம்’ என்ற வியப்புக் குறியோடு சொல்லிக் கொண்டிருந்தார். பேசியவர் புறப்பட்டுப் போனவுடன்