பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சர். கந்தையா வைத்தியநாதன் (இலங்கை) ♦ 187


பிரதமர் என் பக்கம் திரும்பி “இப்பொழுது சிதைக்கு நீங்கள்தான் தீ மூட்ட வேண்டும். அதனைச் செய்ய ஏற்பாடு செய்யுங்கள்” என்றார். “மாண்பு மிகுந்த பிரதமர் அவர்களே! இந்துக்களாகிய நாங்கள் சில பழக்க வழக்கங்களை வைத்துக்கொண்டுள்ளோம். மகன் இருக்கும்பொழுது மகன்தான் தீ மூட்ட வேண்டும். பிள்ளைகளே இல்லையென்றால் பங்காளிகள் தீ மூட்டுவார்கள். ஒரு தொடர்பும் இல்லாத நான் இதனைச் செய்வது பொருந்தாது” என்று கூறினேன். அத்தனையும் கேட்டுக்கொண்ட பிரதமர், “பேராசிரியரே, நேற்று என்னுடைய நண்பர் தம் மனைவியிடம் தம் கடைசி விருப்பத்தைச் சொல்லும்பொழுது நீங்களும்தானே உடன் இருந்தீர்கள்? இப்பொழுது திருமதி கந்தையா மகனிடம் எல்லா விவரங்களையும் எடுத்துக்கூறி மகன் அதைச் செய்யக் கூடாது. நீங்கள்தான் செய்யவேண்டும் என்று ஆணையிட்டு அனுப்பியுள்ளார். நேற்றே நீங்கள் தடை எழுப்பினீர்களா? அதற்காகத்தான். அவர்களுடைய மகன் நடந்ததையெல்லாம் சிங்களத்தில் என்னிடம் எடுத்துக்கூறி இக்கடமையை நீங்கள் செய்தே தீரவேண்டும் என்று வேண்டிக்கொண்டு போனார். தயவு செய்து மறுக்காமல் நம் நண்பரின் கடைசி விருப்பத்தை நிறைவேற்றுங்கள், இது என்னுடையதும் திருமதி கந்தையாவுடையதுமான வேண்டுகோள். இதற்கு ஒன்றும் தடை சொல்ல வேண்டாம்” என்றார்.

அதே இடத்தில் தலைக்குத் தண்ணீர் வைத்து விட்டு, அந்த மாமனிதரின் சடலத்திற்கு நானே தீ மூட்டினேன். தம்முடைய முடிவு எதிரே நிற்கின்றது என்பதை உணர்ந்ததால்தான் போலும் சாமி வந்ததுபோலத் தம்மை மறந்து நண்பர் முதல் நாள் பேசினார். தம்முடைய முடிவை முற்கூட்டி உணர்பவரை மாமனிதர் என்று சொல்வதில் தவறென்ன?