பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தர் யோக சுவாமிகள் ♦ 189


வேறுபாடுமின்றி, சுவாமிகளிடம் ஒவ்வொருநாள் மாலையும் மக்கட் கூட்டம் திரண்டு நிற்கும். குடிசைக்குள் அதிகமாக நின்றால் பதினைந்து அல்லது இருபது பேர்தான் நிற்கமுடியும். இவ்வாறு நிற்பவர்கள் தம் வழிபாட்டை முடித்துக்கொண்டு வெளியே சென்றபிறகுதான் அடுத்த கூட்டம் உள்ளே நுழைய முடியும். ஒவ்வொருவரும் காணிக்கையாகப் பழங்களை வாங்கி வந்து சுவாமிகளின் திருவடிகளில் வைத்து வணங்குவார்கள். எந்த ஒன்றையும் சுவாமிகள் எடுத்து வாயில் போட்டதாக வரலாறு இல்லை.

குறைதீர்க்க வேண்டி வந்தவர்கள் வாய்விட்டுத் தம் குறைகளை சொல்லும் பழக்கமில்லை. எனவே, பதினைந்து இருபது நிமிஷங்கள் ஒரு கூட்டம் உள்ளே நின்றாலும் ஒருவர்கூட வாய்திறந்து எதனையும் சுவாமிகளிடம் கூறியதில்லை. இந்த நடைமுறையின் பொருளை நான் தெரிந்துகொள்வதற்குச் சிறிது காலம் பிடித்தது. 1950 வாக்கில் முதன் முறையாகச் சுவாமிகளைத் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. அதற்குமுன்னர்ச் சுவாமிகளைப்பற்றி அதிகமொன்றும் தெரிந்துகொண்டதில்லை. முதன் முறையாக என்னை அழைத்துச் சென்றவர் வழக்கறிஞர் சிவசுப்பிரமணியம் என்ற ஓர் அன்பராவார். உள்ளே சென்று சுவாமிகளை விழுந்து வணங்கிவிட்டு ஏனையோர்களுடன் நானும் நின்றுகொண்டிருந்தேன். திடீரென்று சுவாமிகள், ‘எடே பொடியன் இங்காலை வந்திருக்கட்டும்’ என்று கூறிவிட்டு, வலப்புறம் கையைக் காட்டினார்கள். என்னைத்தான் சுவாமிகள் குறிப்பிட்டார்கள் என்பதை அறியாத நான், பொடியன் என்று கூறியது யாரையென்று தெரியாமல் நின்று கொண்டிருந்தேன். சுவாமிகள் விரலினால் சுட்டிக்காட்டி, “பொடியா! உன்னைத்தான்” என்று கூறினார்கள். இப்பொழுது என்னை ஒரு பயம் கெளவிக்கொண்டது. சுவாமிகளிடம் நிற்பவர்கள் யாரும் எதிரே உட்காருவதில்லை என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.