பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190 ♦ நான் கண்ட பெரியவர்கள்


அப்படியிருக்க நான்மட்டும் எப்படி அமர்வது என்று அஞ்சி நிற்கையில் கருணை நிறைந்த பார்வையோடு “வா மகனே! இங்கே வந்து உட்கார்” என்று கூறிவிட்டு வலக்கையால் அமரவேண்டிய இடத்தையும் தொட்டுக் காட்டினார்கள். அன்று முதல் எத்தனையோ தடவைகள் சுவாமிகளிடம் சென்றுள்ளேன். ஒவ்வொரு முறையும் வீழ்ந்து வணங்கியவுடன் அமரச் செய்வார்கள். முதல் இரண்டு தடவைகளில் சுவாமிகள் சொல்லிக் கொண்டிருந்தவை என் மனத்தில் குழப்பத்தை விளைவித்தன. சுவாமிகள் விடாமல் நீளமாகப் பாடிக் கொண்டே இருப்பார்கள். கூர்ந்து கவனித்தபொழுது திருவாசகத்தில் அரையடி, தேவாரத்தில் ஒன்றரையடி, திருவிசைப்பாவில் நாலு சொற்கள் என்று மாறி மாறிப் பாடிக்கொண்டே இருந்ததை அறிந்தேன். என் போன்ற விவரம் புரியாதோருக்கு ஏன் சுவாமிகள் இப்படி அரையடி முக்காலடி என்று பாடுகிறார்கள் என்ற சந்தேகம், வெளியே வந்து நண்பர்களைக் கேட்டபோது எப்போதும் சுவாமிகள் இப்படித்தான் பாடிக்கொண்டே இருப்பார்கள் என்றார்களே தவிர யாரும் என் ஐயத்தைப் போக்கவில்லை. உள்ளிருந்து வெளியே வந்த அன்பர்களைக் கண்டு பேசும்போது ஓர் உண்மை தெரியலாயிற்று. தாங்கள் பெரும் குறையோடு இருந்ததாகவும், சுவாமிகள் பாடிக்கொண்டிருக்கையில் தம் மனத்துள் புகுந்து பெரிய அமைதியைத் தந்ததாகவும், தம்முடைய பிரச்சினைகட்கு அப்பாடல்கள் விடையாக அமைந்ததாகவும் கூறினார்கள்.

வருபவர் வாய்விட்டுக் குறைகளைக் கூறுவதும் இல்லை; தங்களுக்கு என்ன குறையென்று அந்த மகாபுருஷர் கேட்பதுமில்லை. ஆனாலும் வருபவர்க்கு அமைதி கிடைத்துவிடும். கம்பநாடன் “வாராதே வரவல்லாய்” என்று கூறுவதன் பொருளைச் சுவாமிகளிடம் இருக்கும்போது தெரிந்துகொள்ள முடிந்தது.