பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தர் யோக சுவாமிகள் ♦ 209


சொல்லவில்லை. காரணம், அதனைப் புரிந்துகொள்ளும் பக்குவம் அவருக்கில்லை என்பதை நான் அறிந்திருந்ததால் அவரிடம் ஒன்றும் கூறவில்லை. அ.ச.ஐயா, மகானின் திருவருளுக்குத் தாங்கள் பாத்திரமானது போல நானும் பாத்திரமாயினேன்” என்று கூறி மெய்சிலிர்த்தார்.

அன்று இரவு கொழும்பில் பேசும்பொழுது இந்த நிகழ்ச்சியைச் சொல்லாமல் திருப்பைஞ்ஞீலியில் நாவரசர் பெருமானுக்கு இறைவன் கட்டமுது அளித்ததையும், சுந்தரர்க்கும் அவ்வாறே அளித்ததையும் கூறிவிட்டு “இதில் வியப்பொன்றுமில்லை. ‘விச்சது இன்றியே விளைவு செய்குவான்’ ஆகிய இறைவன் திருவிளையாடலில் இது ஒரு சாதாரண நிகழ்ச்சி. இதுபோன்ற நிகழ்ச்சிகளை அனாயாசமாகச் செய்துகாட்டும் மகான்கள், சித்தர்கள் இப்பொழுதும் இருக்கிறார்கள். நல்வினை உடையவர்கள் அவர்களைக் கண்டு ஆசிபெற முடியும்” என்று கூறி முடித்தேன்.

அருளாளர்கள் என்பவர்கள் எப்போதும், எல்லா இடங்களிலும் இருந்துகொண்டு இறைவன் கட்டளைகளை நிறைவேற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை இனங்கண்டு கொள்வதும், காண்டதும் அவர்களுடைய அருளாசிகளைப் பெறுவதும் பல பிறப்புக்களிலும் நாம் செய்த புண்ணியத்தின் பயனே ஆகும். ‘கந்துக மதக்கரியை வசமாய் நடத்தலாம்’ என்று முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர்த் தாயுமானவப் பெருந்தகை கூறியதை 1955லும் செய்து காட்டும் அருளாளர்கள் இருக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டவே இப்பெருமகனாருடைய வாழ்வில் அவர் நிகழ்த்திய நான்கு அற்புதங்களை மேலே கூறியுள்ளேன். அப்பெருமானின் அருளாசி அனைவருக்கும் கிட்ட வேண்டும் என்று அவருடைய திருவடிகளை வேண்டி அமைகின்றேன்.