பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214 ♦ நான் கண்ட பெரியவர்கள்



எவ்விதக் கவலையுமின்றி நூலையும் வெளியிட்டு ஆகஸ்டு மாதத்தில் சேக்கிழார் விழாவையும் நடத்திவிடலாம் என்று இருந்த எனக்கு ஒரு பேரதிர்ச்சி, மே ஐந்தாம் தேதி காத்திருந்தது. எதிர்பாராத வகையில், மாரடைப்பால் ஒரே விநாடியில் உயிர் துறந்தார், வள்ளல் ஜெயராமன்.

நூலையோ அச்சிடுவதற்குக் கொடுத்தாகிவிட்டது. கையில் காசு ஒன்றும் இல்லை. மூன்று இலட்ச ரூபாவிற்கு மேல் தேவைப்பட்ட நிலையில் செய்வதறியாது திகைத்து நின்றிருந்தேன். எனது அருமை நண்பரும், ஆராய்ச்சி மைய அறங்காவலருள் ஒருவருமாகிய அமரர் கி. மு. அழகர்சாமி அவர்கள் “மனம் தளர்ந்து பயனில்லை. காஞ்சிபுரம் போய் அம்பிகையை வேண்டிக்கொண்டு வரலாம்” என்று அமைதி கூறினார். அதனை நான் ஏற்றுக்கொண்டதால் அவருடைய காரிலேயே இருவருமாகப் புறப்பட்டுச் சென்றோம்.

காஞ்சியிலுள்ள இராமாஸ் லாட்ஜில் தங்கிப் பகலுணவை முடித்துக்கொண்ட பிறகு மாலையில் கோவிலுக்குச் செல்ல முடிவு செய்தோம். அந்த லாட்ஜின் உரிமையாளர் நடராஜ ஐயர், அமரர் அழகர்சாமி, நான் ஆகிய மூவரும் ஓரறையில் அமர்ந்து, ‘மேற்கொண்டு எப்படி நூலை வெளியிடுவது?’ என்று சிந்தித்துக் கொண்டிருந்தோம். திடீரென்று கதவைத் திறந்து கொண்டு தமிழறிஞர் குமா.ஜெயசெந்தில்நாதன் உள்ளே நுழைந்தார். ‘எந்தக் கோட்டையைப் பிடிக்க இவ்வளவு தீவிர ஆலோசனை?’ என்றார். நடந்தவற்றைக் கூறினேன். ஒரு கணங்கூடத் தாமதிக்காமல் “அண்ணா புறப்படுங்கள், மகாப்பெரியவரைத் தரிசித்துவிட்டு வரலாம்” என்றார் ஜெயசெந்தில்நாதன் அவர்கள்.

திடீரென்று வந்த அந்தச் சொற்கள் ஏதோ ஓர் ஆணைபோல் என் மனத்திற் பட்டது. மறுபேச்சின்றி, ‘புறப்படலாம்’ என்றேன். திரு. ஜெயசெந்தில்நாதன், அமரர்