பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220 ♦ நான் கண்ட பெரியவர்கள்


அறிவாளிகளில் ஒருவராகிய இராஜாஜியும், தம்மை மறக்கும் நிலையிலுள்ளவர்களில் ஒருவர்தான். டி.கே.சி.யைச் சொற்பொழிவாளர் என்று கூறுவதைக் காட்டிலும் நாதோபாசனை செய்யும் ஒரு முனி என்று கூறுவது முற்றிலும் பொருத்தமாக இருக்கும்.

தொ.மு.பாஸ்கரத்தொண்டமான்: அந்நாளில் இந்திய ஆட்சிப் பணியில் வேலைபார்த்தவர், கம்பனில் தோய்ந்த ஈடுபாடுடையவர். காரைக்குடிக் கம்பன் விழாவில் தவறாமல் பங்குகொள்பவர்.

புலவர் கா. நயினார் முகம்மது: சிறந்த படிப்பாளி, சிறந்த பேச்சாளரும்கூட, உடுமலைப் பேட்டையில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர். சிறந்த எல்லாத் தமிழ் இலக்கியங்களிலும் குறிப்பாகக் கம்பனிலும் பெரிதும் ஈடுபாடு கொண்டு கம்பன் விழா முதல் பல மேடைகளிலும் பேசிவந்தார்.

புரிசை முருகேசு முதலியார்: பாரதம் இராமாயணம் ஆகியவற்றை மாதக் கணக்கில் பேசும் திறம் வாய்ந்தவர்.

திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் சுவாமிகள்: பெரும் கல்வியாளர். காலட்சேபப் பாணியில் அல்லாமல் சொற்பொழிவாகவே மூன்று, நான்கு மணிநேரம் பேசும் வல்லமை படைத்தவர்.

பேராசிரியர் இரா. இராதாகிருஷ்ணன்: திருச்சி தேசியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர், அற்றை நாள் மிகச் சிறந்த பேச்சாளர்களுள் அவரும் ஒருவர். மேலே கூறப்பெற்றவர்களைப்போல் அல்லாமல் பட்டிமண்டபத்திலும் பாங்கறிந்து ஏறிக் கேட்போரை பிரமிக்க வைக்கும் முறையில் பேசும் ஆற்றல் வாய்ந்தவர்.