பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்றைய சொற்பொழிவாளர்கள் ♦ 223



மிக இளமையிலேயே பேசத் தொடங்கிவிட்டதால் 1943 வரையில் எழுத்துப் பணியில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படவில்லை. எதுபற்றியும் எழுத வேண்டும் என்ற எண்ணம்கூட என் மனத்தில் தோன்றியதில்லை. நல்ல ஆராய்ச்சியாளராக இருந்த என் தந்தையார்கூட எழுத்துப் பணியில் ஈடுபடவில்லை. எனவே, எனக்கும் அதில் ஈடுபாடு தோன்றாததில் புதுமையொன்றுமில்லை.

இந்த நிலையில் 1940இல் சென்னையில் குடியேறினேன், 1932முதலே வாகீச கலாநிதி கி.வா. ஜகந்நாதன் அவர்களை அறிவேன் என்றாலும், 1940க்குப் பிறகு எங்கள் தொடர்பு நெருக்கம் பெற்றது.

பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ. மாணவர்களுக்கு இலக்கியத் திறனாய்வு போதிக்கும் பணி, எனக்குத் தரப் பெற்றது. அதற்கு முன்னர்த் திறனாய்வு என்ற பகுதியே தமிழ் இலக்கியத் துறையில் இடம்பெற்றதில்லை, புத்தம் புதிய துறை ஆதலின், அத்துறையிலுள்ள ஆங்கில நூல்களைப் படித்து மெள்ளமெள்ளத் தமிழாக்கம் செய்துகொண்டிருந்தேன். கி. வா. ஜ, இப்புதுத் துறையைத் தமிழில் புகுத்துவத்ற்குக் கலைமகள் மாத இதழைப் பயன்படுத்த முடிவுசெய்தார். எழுத்தைப் பொறுத்தவரை முழுச்சோம்பேறியாக இருந்த என்னை விடாமல் சொல்லிச் சொல்லி மாதந்தோறும் எழுதுமாறு ஒர் ஏற்பாடு செய்தார். எழுத்துத்துறையில் நான் புகுந்ததற்கு நண்பர் கி.வா.ஜ.வும் கலைமகளுமே காரணமாகும்.

இந்த எழுத்துத்துறை அல்லாமல் கி.வா.ஜவுடன் சேர்ந்து நூற்றுக்கணக்கான மேடைகளில் பேசும் சூழ்நிலையும் உருவாயிற்று.