பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


29. நீங்காத நினைவுகள் திருவாவடுதுறை இராஜரத்தினம் பிள்ளை


1945இல் ஒரு சொற்பொழிவிற்காக நாகர்கோயில் சென்றிருந்தேன். மாலையில் சொற்பொழிவு ஆதலால், ‘கோல்டன் ஹோட்டல்’ என்ற விடுதியில் தங்கியிருந்தேன். வேலையொன்றும் இல்லை என்பதனால் அறைக் கதவைச் சாத்திவிட்டு, காலைத் தூக்கி மேசையின்மேல் வைத்துக்கொண்டு மனம்விட்டுப் பாடிக்கொண்டிருந்தேன். சண்முகப்பிரியா இராகத்தைத் தெரிந்தளவு பாடிவிட்டு, திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழில் ஒரு பாடலைத் தொடங்கப்போகும் நேரம் கதவை யாரோ தட்டினார்கள். “தாளிடவில்லை. திறந்துகொண்டு வாருங்கள்” என்று உள்ளிருந்தபடியே குரல் கொடுத்தேன்.

கதவு திறக்கப்பட்டது. முதலில் காட்சியளித்தது இரண்டு வைரக்கடுக்கன்கள். நாதஸ்வரச் சக்கரவர்த்தி திருவாவடுதுறை இராஜரத்தினம் பிள்ளையவர்கள் உள்ளே நுழைந்தார். எழுந்து வணக்கம் செய்துவிட்டு உள்ளே வந்து அமருமாறு வேண்டிக்கொண்டேன். அவரும் மெள்ளவந்து எதிரிலுள்ள நாற்காலியில் அமர்ந்தார். சற்றுநேரம் என்னைப் பார்த்தபடியே இருந்தார். பின்னர் மெள்ள வாய்திறந்து “தம்பி யாரு? இங்கு எதுக்கு வந்திருக்கு” என்று வினவினார்.

பச்சையப்பன் கல்லூரியில் பணிபுரியும். நான் யாரென்பதை அவருக்கு எடுத்துச் சொன்னேன். மேலும் அன்று மாலை ‘காரைக்கால் அம்மையார்பற்றிய சொற்பொழிவு செய்வதற்காக வந்துள்ளேன்’ என்பதையும் சொன்னேன். “தம்பிக்குப் பாடத் தெரியும்போல இருக்கே!