பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்காத நினைவுகள்- திருவாவடுதுறை இராஜரத்தினம் பிள்ளை ♦ 235


ஏற்றப்பட்டார்கள். ‘சகடை’ என்பது பதினைந்து அடிக்குப் பத்தடி அளவுள்ள ஒரு சட்டம் செய்து அதன்மேல் நீண்ட பலகைகளை வைத்து இறுக்கப்பெற்றதாகும். பூமியிலிருந்து ஆறு அல்லது எட்டங்குல உயரத்தில் இச்சகடை அமைந்திருக்கும். நான்குபுறமும் சக்கரங்கள் பூட்டியிருக்கும். அதில் பிள்ளையவர்கள் தாமும் ஏறிக்கொண்டு என்னையும் உடனேறச் சொன்னார்கள். நானும் ஏறி நின்றேன். ஊர்வலம் புறப்படும்பொழுது பிள்ளையவர்கள் “இன்று தம்பிக்காகச் சண்முகப்பிரியா வாசிக்கலாம்” என்று உடனிருந்த நாதஸ்வரக்காரரிடம் கூறிவிட்டார்.

ஊர்வலம் பத்தடி சென்றதும் மிகமிக விஸ்தாரமாகச் சண்முகப்பிரியா இராகத்திற்கு அத்திவாரமிட்டார் பிள்ளையவர்கள். அரைமணிக்கு மேலாகியும் பிள்ளையவர்கள் அத்திவாரத்திலேயே நின்றுகொண்டிருந்தார். கேட்க வந்திருந்த ஆயிரம் பேர்களும் தம்மை மறந்து இலயித்து நின்றனர். திடீரென்று புறப்படலாம் என்று பண்டார சந்நிதி குறிப்புக் காட்டிவிட்டார். பிறவிக் கலைஞருக்கு எல்லையற்ற கோபம் வந்துவிட்டது. ஒலிவாங்கி எதிரே இருக்கிறது என்பதைக்கூடக் கவனிக்காமல், பிள்ளையவர்கள் வாயில் வந்தபடி ஏசிவிட்டு “இனி வாசிக்கமாட்டேன்” என்று கூறிமுடித்தார். அத்தோடு அவர் விடவில்லை. “தம்பி வாங்க போகலாம்” என்று என்னையும் அழைத்துக்கொண்டு சகடையை விட்டிறங்கி ஹோட்டலை நோக்கிப் புறப்பட்டுவிட்டார். எவ்வளவு பேர் வேண்டிக்கொண்டும் கலைஞரின் கோபம் தணிந்தபாடில்லை. இதுவே கலைஞரை நான் முதலில் சந்தித்த நிகழ்ச்சியாகும். இம்மட்டோடு இது நின்றிருந்தால் இதை இங்கு எழுதவேண்டிய தேவையே ஏற்பட்டிராது.

இது நடந்து பத்துப் பன்னிரண்டு ஆண்டுகள்வரை பிள்ளையவர்களின் கச்சேரி கேட்டிருக்கிறேனே தவிர அவரைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பே இல்லை. 1958 என்று