பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

236 ♦ நான் கண்ட பெரியவர்கள்


நினைக்கின்றேன். நான் அகில இந்திய வானொலியில் பணி புரிந்துகொண்டிருந்த காலம் அது. சென்னை வானொலியில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துகொண்டிருந்த திரு. சங்கரன் அவர்களிடம் இந்த நாகர்கோவில் தகவலை ஏதோ பேச்சுவாக்கில் கூறியிருந்தேன். அப்பொழுது அவர் “ஐயா! சென்ற மூன்று ஆண்டுகளாகப் பிள்ளையவர்கள் வானொலிக்கு வந்து வாசிப்பதையே நிறுத்திவிட்டார். ஏதோ கருத்துவேற்றுமை என்று நினைக்கின்றேன். நாமிருவரும் இன்று அவரிடம் செல்லலாம். தாங்கள் அழைத்தால் ஒருவேளை அவர் வந்தாலும் வரலாம்” என்றார். என்னைப் பொறுத்தவரை இது அவ்வளவு சரியாகப்படவில்லை. “ஐயா! பத்து வருடங்களுக்கு முன்னால் ஒரு சில மணிநேரம் கூடியிருந்ததை அவர் எப்படி நினைவில் வைத்துக்கொண்டிருப்பார்! அந்த உறவை நினைவூட்டி வானொலியிடம் கருத்து மாறுபாடு கொண்டிருக்கும் அவரை, வாருங்கள் என அழைக்க எனக்கு என்ன உரிமையிருக்கிறது? நான் வரவில்லை” என்று கூறினேன். சங்கரன் விடுவதாக இல்லை. “வானொலி தம்மைச் செம்மையாக நடத்தவில்லையென்று எங்கள்மேல் அவர் கோபம் கொண்டிருக்கிறார். அந்தக் கோபத்தைத் தணிக்க நீங்கள் உதவியாக இருக்கலாம் வாருங்கள் போகலாம்” என்றார். வண்டியை எடுத்துக்கொண்டு இருவரும் புறப்பட்டோம்.

பிள்ளையவர்களின் வீட்டுக்குச் சென்றபோது அவர் அமைதியாக உட்கார்ந்து சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். திரு. சங்கரனைப் பார்த்தவுடன் மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்றார். உடனிருந்த என்னைப் பார்த்துத் “தம்பி யாரு?” என்று கேட்டார். “பத்துப் பன்னிரண்டு வருடங்களுக்குமுன் திருவாவடுதுறைப் பண்டார சந்நிதிக்காக நீங்கள் நாகர்கோயில் போயிருந்தீர்களா?” என்று திரு. சங்கரன் அவர்கள் கேட்டார். அதற்குப் பிள்ளையவர்கள் “இப்ப நினைவிற்கு வருது. போயிருந்தேன்”