பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்காத நினைவுகள்- திருவாவடுதுறை இராஜரத்தினம் பிள்ளை ♦ 237


என்றார். “அங்கு நீங்கள் தங்கியிருந்தபோது ஏதாவது விசேசம் நடந்ததா? யாரையாவது பார்த்தீர்களா?” என்றார் சங்கரன். சற்று யோசனைக்குப் பிறகு “ஆமா. ஒரு ஹோட்டல்ல தங்கியிருந்தேன். இரண்டு ரூம் கழித்து ஒரு புள்ளை தங்கியிருந்திச்சு. அது பாடிச்சு. அந்தப் புள்ளைக்கிட்ட ரொம்ப நாழி பேசிக்கிட்டிருந்தன், சாயங்காலம் அந்தப் புள்ளை மீட்டிங் பேசிச்சு. நானும் போய்க் கேட்டன்” என்றார். உடனே சங்கரன் “அந்தப் புள்ளை இதுதான். இப்ப இது ஆல் இந்தியா ரேடியோவில் வேலை செய்யிது. உங்களைப் பார்க்கணும்னு சொல்லிச்சு. அதுதான் கூட்டிக்கிட்டு வந்தேன்” என்றார்.

பிள்ளயவர்கட்கு எல்லையில்லாத மகிழ்ச்சி. எழுந்துவந்து ஏறத்தாழ என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டு “என்னைப் பார்க்கணும்னு வந்தீங்களே. ரொம்பச் சந்தோசம். உங்களுக்கு நான் என்ன செய்யனும்” என்றார். “ஐயா உங்களிடத்தில் இருக்கின்ற தெய்விகமான சங்கீதம் கோடிக் கணக்கான மக்களை மகிழ்விக்க வேண்டியது. இந்தக் காலத்தில் ரேடியோ ஒண்ணிலதான் கோடிக் கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் உங்க தெய்விகமான சங்கீதத்தை அனுபவிக்க முடியுது, தயவுசெய்து எனக்காக ஒரு தடவை வந்து வாசிச்சீங்கண்ணா எனக்கு ரொம்பத் திருப்தியாக இருக்கும்” என்று கூறி நிறுத்திவிட்டேன்.

ஒரு விநாடிகூடத் தாமதிக்காமல் “சங்கரண்ணை! தம்பியே வந்து கேக்குது, மாட்டேண்ணு எப்பிடிச் சொல்லுறது. தம்பி எப்ப சொல்லுதோ வந்து வாசிச்சிட்டாப் போகுது” என்றார். சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வெளியே வந்துவிட்டோம். திரு. சங்கரன் அவர்களுக்கு இருப்புக் கொள்ளவில்லை. “யாருமே செய்யமுடியாத காரியத்தை நீங்க செய்துவிட்டீங்க” என்று கூறி மகிழ்ந்தார்.