பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14 ♦ நான் கண்ட பெரியவர்கள்


பெரும்பாலும் பூசை முடிந்தபிறகு அவர் ஏதோ பேசிக்கொண்டிருப்பார். அது யாருடன் என்பது முதலில் எங்களுக்குத் தெரியாது. பல சமயங்களில் அவர் வழிபடும் கருணாம்பிகையிடம்தான் பேசுகிறார் என்பதை அறிந்து கொள்ளும் வாய்ப்பு, தந்தையார் உள்பட எங்களுக்குப் பிற்காலத்தில் ஏற்பட்டது. ஒருமுறை எனக்குப் பத்து வயது இருக்கும் என்று நினைக்கிறேன். அப்பொழுது லால்குடி வடக்குத் தெருவில் தங்கியிருந்தோம். பூசை முடிந்தபின் என் தாயார் தந்தையாரிடம் வந்து “புதுத்தெருவில் கோபாலகிருஷ்ணையர் என்ற பெரிய பொறியியல் வல்லுநர் வீட்டில் ஒரு பதக்கம் இருக்கிறது. சிவப்புக் கல்லாலான அந்தப் பதக்கம் விற்பனைக்குத் தயாராக உள்ளது. அதைப் போய் வாங்கி வந்து, கருணாம்பிகைக்கு அவினாசியில் கொண்டுபோய் அணிவிக்க வேண்டும்” என்றார். தாயாருடைய ஆன்மிகப் பழக்க வழக்கங்களில் நம்பிக்கை கொண்டவராயினும் தந்தையார் இதனை ஏற்க மறுத்து விட்டார். கோபாலகிருஷ்ணையர் மிக மிக வசதி படைத்த ஒருவர். பெரிய ஒரு வீட்டில் குடியிருக்கிறார். பொதுவாக வசதி படைத்தவர்கள் தங்களிடம் உள்ள நகைகளை விற்பது என்பது அக்காலத்தில் நடைபெறாத காரியம், விற்பது என்றாலே “ஏதோ குடும்பத்தில் ஒரு சூழ்நிலை உருவாகித்தான் நகைகளை விற்கத் தொடங்கியிருக்கிறார்கள்” என்ற அவப்பெயர் வருமாதலால் யாரும் விற்கின்ற பழக்கமில்லை. எனவே, தந்தையார் மறுத்து விட்டாலும் தாயார் விடாமல் “அதை நூற்றைம்பது ரூபாய் கொடுத்து வாங்கிவிடுங்கள்” என்று சொன்னார்கள். அதோடு ரூபாயையும் எடுத்துக் கொடுத்தபொழுது தந்தையால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மடியில் விபூதிப் பையில்தான் பணத்தை வைப்பார், வைத்துக் கட்டிக் கொண்டு புதுத்தெரு சென்று ஏதோ நிஜமாகத் தெருவோடு போகிறவர்போலச் சென்று கோபாலகிருஷ்ணையரைச் சந்தித்தார். கோபாலகிருஷ்ணையர் தந்தையாரிடம் மிகவும்