பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்காத நினைவுகள்- கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ♦ 243


முடிவிற்கு வந்தோம். தொலைபேசியில் கலைவாணரை அழைத்து வானொலியில் ஒலிபரப்பப்படும் பேச்சுக்கள் அனைத்திற்கும் எழுத்துவடிவில் மூல ஆவணம் இருக்க வேண்டும் என்ற சட்டத்தை எடுத்துக்கூறி அவருடைய பேச்சைச் சுருக்கமாக வரைந்தனுப்புமாறு வேண்டிக் கொண்டேன். அவரும் எழுதி அனுப்பிவிட்டார்.

வருஷப்பிறப்பும் வந்தது. பூந்தமல்லி நெடுஞ்சாலையிலுள்ள ‘தாஸ்ப்பிரகாஷ்’ ஹோட்டலிலுள்ள திறந்தவெளிக் கலையரங்கில் கலைவாணர் பேச ஏற்பாடாகியிருந்தது. அது நேரடி ஒலிபரப்பு ஆதலின், அவர் பேச்சை அப்படியே ஒலிபரப்ப ஏற்பாடு செய்திருந்தோம். மிக அற்புதமான முறையில் கலைவாணர் பேசத் தொடங்கினார். ஆனால், அவர் பேச்சுக்கும் அவர் எழுதிக் கொடுத்திருந்த பேச்சுக் குறிப்பிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.

திடீரென்று உணர்ச்சி மிகுந்த குரலில் “இன்று தமிழ் அன்னைக்கு ஓர் ஆபத்து. அவள் பெற்ற பிள்ளையாகிய திருவேங்கடத்தை யாரோ ஒருவர் தூக்கிக்கொண்டு போக முனைந்துவிட்டார். பிள்ளை தன்னுடையது என்று தமிழன்னை சண்டை போட்டுக்கொண்டு இருக்கும்போதே அவள் பெற்ற பெண்ணாகிய தென் குமரியை இன்னொருத்தர் எடுத்துக்கொண்டு போக முற்பட்டு விட்டார். ஒரே நேரத்தில் தமிழன்னையின் இரண்டு பிள்ளைகளாகிய வடவேங்கடத்தையும் தென்குமரியையும் பிறர் எடுத்துச்செல்வதை தமிழன்னை எப்படிப் பார்த்துக்கொண்டிருப்பாள்?” என்ற முறையில் கலைவாணரின் பேச்சுத் தொடர்ந்தது.

எங்களுக்கோ உதறல் நிலைய இயக்குநரும் நானும் செய்வதறியாது திகைத்தோம். ‘பேச்சை அப்படியே நிறுத்தி ஒலி பரப்பில் தடங்கல் ஏற்பட்டது என்று கூறிவிடலாமா!’ என்றுகூட நினைத்துப் பார்த்தோம். ஆனால், பல