பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அன்னையார் ♦ 15


மரியாதையும் அன்பும் உடையவராதலால் “வருக வருக” என்று இவரை வரவேற்று, இரண்டு பேரும் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அப்படியிருக்கும்பொழுது திடீரென்று ஐயரின் தாயார் வாசற்படிக் கதவருகில் நின்றுகொண்டு “இந்தச் சிவப்புக் கல் பதக்கம் ஒன்று எவ்வளவு வருடமாக வீட்டில் கிடக்கிறது! அதை என்னடா பண்ணுவது? நாம யாரும் போடவும் முடியாது. அதை வித்துவிடேன். என்னத்துக்கு அது?” என்றார். தந்தையார் திடுக்கிட்டார். ஆனால் ஒன்றும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அதற்கு ஐயர் “சரிம்மா, கொடுத்தால் போச்சு என்ன விலை என்றால் கொடுக்கலாம்” என்றார். அதற்கு “நூறு, நூற்றைம்பது வந்தால் கொடுத்துவிடலாம்” என்றார். உடனே தந்தையார் “நான் நூற்றைம்பது ரூபாய் கொடுத்து, அதை வாங்கிக் கொள்கிறேன்” என்றார். ஐயருக்கு ஒன்றும் புரியவில்லை.

“தாயார் விற்கலாம் என்று சொன்னார். நீங்கள் வாங்கவேண்டும் என்று ஒன்றும் அவசியம் இல்லை. நீங்கள் இதற்காகச் சிரமப்படவேண்டாம்” என்றார்.

தந்தையார் நடந்தவற்றைக் கூறியவுடன் ஐயர் மறுவார்த்தை பேசாமல் பதக்கத்தைக் கொண்டுவந்து கொடுத்தார். தந்தையார் வாங்கிக் கொண்டு வந்துவிட்டார். பிறகு ஓரிரு மாதம் கழித்து அவினாசிக்குச் சென்று அபிஷேகமெல்லாம் செய்து அம்பிகைக்கு அப்பதக்கத்தை அணிவித்தார்கள், என் தாய் தந்தையர். அந்தப் பதக்கம் இன்னும் அவினாசி அம்பிகைக்கு மார்புப் பதக்கமாக இருப்பதை அறிவேன். இது தாயாருடைய ஆன்மிகத் துறையில் கிடைத்த அனுபவம்.

இது போல எத்தனையோ சொல்லிக்கொண்டு போகலாம். தாயார் அம்பிகையுடன் பேசும் பழக்கமுடையவர் என்பது அந்த ஊரில் எல்லோருக்கும் தெரிந்ததால், கோயிலில் பூசை செய்கின்ற அர்ச்சகர்கூடத் தாயாரிடம் வந்து விபூதி வாங்கிச் செல்வார்.