பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஸ்ரீலஸ்ரீ வாலையானந்த சுவாமிகள் ♦ 17


அவரால் குடிக்க இயலாதபொழுது நாங்கள் சிறிது சிறிதாக அந்த மோரைச் செலுத்தினோம். டாக்டர் சோமசுந்தரமும் மற்றவர்களும் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரு வழியாக இரண்டு டம்ளர் மோரையும் குடிக்கவைத்துப் படுக்க வைத்துவிட்டோம். ஒரு பத்து நிமிடங்கள் கழித்து ஒரு பெரிய கனைப்பு இருமல், எழுந்து உட்கார்ந்தார் தந்தையார், “என்ன எல்லோரும் கூடியிருக்கிறீர்கள்?” என்றார். அப்பொழுது டாக்டர், செட்டியார், முதலானவர்களுக்கு ஏற்பட்ட வியப்பிற்கு ஒரு அளவேயில்லை. பிறகு “ஒன்றும் இல்லை” என்று சமாதானம் சொல்லி, “உங்களுக்கு உடல்நிலை நன்றாக இல்லை” என்றார்கள். “அதுதான் பார்க்க வந்தோம்” என்று கூறி, பிறகு அங்கேயே இருந்து தந்தையார் நன்றாக நினைவு திரும்பி உடல் நன்றான பிறகு அவர்கள் எல்லோரும் புறப்பட்டார்கள். பிறகு அம்மா அவர்கள் நடந்தவற்றைச் சொன்னார்கள். “சரி, கருணாம்பிகை வைத்தியம் என்றால் அப்புறம் என்ன?” என்றார்கள், பிறகு உடல் தேறி மலேசியா எல்லாம் போய் வந்தார்கள். அது வேறு விஷயம்.

இந்த இரண்டு நிகழ்ச்சிகள் தாயாருடைய தெய்விக ஆற்றலுக்குச் சான்றாக உள்ளவை.


3. ஸ்ரீலஸ்ரீ வாலையானந்த சுவாமிகள்


என் தந்தையார் ‘பெருஞ்சொல் விளக்கனார்’ அ.மு.சரவண முதலியார் அவர்கள், தமிழகத்தில் மிகச் சிறந்த பேச்சாளர்களுள் ஒருவர். அவருக்கு மகனாகப் பிறந்த காரணத்தாற்போலும் எனது ஒன்பதாவது வயதில் மேடையேறிப் பேசத் தொடங்கினேன். 1916ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதியில் பிறந்த நான், முதலில் மேடையேறியது 1925இல் ஆகும். திருச்சியை அடுத்த துறையூர் என்ற ஊரில் சைவர்கள் மகாநாடு ஒன்று