பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18 ♦ நான் கண்ட பெரியவர்கள்


நடைபெற்றது. எனக்கும் அதில் ஒரு பங்கு தரப்பெற்றது. மிகவும் குட்டையாக இருந்தமையால் என்னை மேசை மேல் ஏற்றிவிட்டுப் பேசச் செய்தார்கள். கூட்டத்திற்குத் தலைமை வகித்தவர் ஸ்ரீலஸ்ரீ வாலையானந்த சுவாமிகள் ஆவார். தஞ்சையை அடுத்த கொரடாச்சேரியில் சித்தாந்த மடம் ஒன்று அமைத்து, அதன் தலைவராகத் திகழ்ந்தவர் அவர்கள். சைவசித்தாந்த அடிப்படையில், சித்தாந்தப் படம் ஒன்றை வரைந்து, சித்தாந்தப் பட விளக்கம் என்ற தலைப்பில் மிகப் பெரிய காகிதத்தில் (wall poster அளவில்) அச்சிட்டு, போகும் இடமெல்லாம் இதனை வழங்கினார். இப்பெருமகனார் தலைமையில் நான் பேசினேன் என்றாலும், அவரையோ அவருடைய பெருமையையோ என் வயது காரணமாக அறிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், மிக முரட்டுக் குணம் உடைய போலி வேடதாரிகளை மதிக்காத என் தந்தையார், சுவாமிகளிடம் காட்டிய பணிவு எனக்கு வியப்பைத் தந்தது.

மேசைமேல் ஏறி நின்றுகொண்டு ஒரு இருபது நிமிடம் மெய்ப்பொருள் நாயனார் வரலாற்றைப் பேசினேன். எல்லாம் முடிந்தது. சுவாமிகள் தங்கியுள்ள இடத்திற்குக் கொஞ்ச தூரத்தில் சொற்பொழிவாளர்கள் தங்கியிருந்தனர். என் தந்தையாருடன் படுத்திருந்த எனக்கு நடு யாமத்தில் மூச்சு விட முடியவில்லை. தந்தையாரைத் தட்டி எழுப்பி, கையசைவினால் ‘என்னால் மூச்சு விட முடியவில்லை’ என்பதைத் தெரிவித்தேன். என் கழுத்தைத் தொட்டுப் பார்த்த என் தந்தையார் மிகப் பெரியதாக என் கழுத்து வீங்கியிருந்ததைக் கண்டிருக்க வேண்டும். உடன் இருந்த கடல்மடை மா.ரா. குமாரசுவாமிப் பிள்ளையும் என் தந்தையாரும் என்னைத் தூக்கிக்கொண்டு சுவாமிகள் தங்கியிருந்த இடத்திற்குக் கொண்டு சென்று, நடந்தவற்றைக் கூறினர். உள்ளே என்னைப் படுக்க வைத்துவிட்டு,