பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருப்பதி ஐயா ♦ 21


வருபவர்கள் என்றுதான் நினைத்திருந்தேன். ஸ்ரீ வாலையானந்த சுவாமிகள் இப்படித்தான் இருப்பார்கள். ‘அவரும் சுவாமிகள், இவரும் சுவாமிகளா’ என்ற ஐயம் என் மனத்தில் தோன்றிவிட்டது. வந்தவரோ ஒற்றை வெள்ளை வேட்டிக்காரர். உருத்திராக்கம் முதலிய எதுவுமில்லை. ஒரு விபூதிப் பைகூட அவரிடமில்லை. எப்போதும் சிரித்துக்கொண்டேயிருந்தார். இவரைப் போய்ச், ‘சுவாமிகள்’ என்று தந்தையார் சொல்கிறாரே என்ற குழப்பம் மனத்தில் ஏற்பட, அரைகுறை மனத்துடன் விழுந்து வணங்கினேன். வந்தவர் எனது உச்சம் தலையில் கைவைத்து ஆசீர்வதித்து முதுகைத் தட்டிக் கொடுத்தார்.

என் தாயார், கருணாம்பிகையை வழிபடு தெய்வமாகக் கொண்டு மிக நீண்டநேரம் வழிபாடு செய்யக்கூடியவர். தந்தையாரோ சிவபூசைக்காரர். இவர்கள் இருவரும் வந்தவரை உயர்ந்த ஆசனத்தில் இருத்தி, எல்லையற்ற பயபக்தியுடன் கைகளைக் கட்டிக்கொண்டு ஒரு ஆறு ஏழடி தூரத்தில் நின்றுகொண்டிருந்தது எனக்கு வியப்பை அளித்தது. அப்பாவிபோல் தோற்றமளிக்கும் இந்த நாலடி மனிதரிடம் ஏன் இவர்கள் இவ்வளவு பயபக்தியுடன் நிற்கிறார்கள் என்ற வினா என்னுள் எழுந்தது.

திருப்பதி சுவாமிகள் என்ற பெயரையுடைய இந்தப் பெரியவர், பலமுறை அமரச் சொல்லிய பிறகு என் தந்தையார் அவரெதிரே அமர்ந்து, பேசும் பொழுதெல்லாம் கைகளை வாயினிலே வைத்துக்கொண்டு மிகப் பணிவாகப் பேசினார். என்ன பேசினார்கள் என்பது எனக்குப் புரியவில்லை. சுவாமிகள் அவர்கள் இரண்டு மூன்று நாட்கள் எங்களுடனேயே இருந்தார். மதியம் ஒரு வேளை மட்டுந்தான் உண்டார். அவரை அமரச் செய்து எதிரே இலையைப் போட்டு, என் தாயார் பரிமாற, தந்தையார் நின்றுகொண்டே இதைப் பார்த்துக்கொண்டு நின்றார்.