பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26 ♦ நான் கண்ட பெரியவர்கள்


கொம்பா?” என்று கேட்டுவிட்டு, அதோடு நிறுத்தாமல், “அவருக்குப்பின் நான் பேசுகிறேன்” என்றேன். என் தந்தையார் என்னைக் கடிந்துகொண்டார்கள். ஆனால், பிள்ளையவர்கள் “அப்படியானால் இன்றிரவு, ரா.பிக்குப் பின்னால் நீ பேசலாம்” என்றார். பிள்ளையவர்களைத் தவிர மற்று அனைவரும் என்னைக் கோபத்துடன் பார்த்தனர்.

விழாத் தொடங்கியது. திரு. ரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள் பேசத் தொடங்க இரவு 1 மணிக்குமேல் ஆகிவிட்டது. இரவு 10.30 மணிக்கு மேடையின் பின்புறம் நான் தூங்கிவிட்டேன். திரு. சேதுப்பிள்ளையவர்களின் பேச்சு முடியும் தறுவாயில் வ.உ.சி அவர்கள் எல்லையற்ற அன்புடன் ஈரத்துணியால் என் முகத்தைத் துடைத்து, தூக்கம் கலையுமாறு செய்தார்கள். வழக்கம்போல் மேசையில் ஏற்றிவிட்டார்கள். எழுந்திருந்து என்னை அப்படியே தூக்கிக்கொண்டார்கள். பேசத் தொடங்கிய ஐந்து நிமிடத்தில் பிள்ளையவர்கள் தூக்கி வைத்துக் கொண்டே “பேசு ஐயா, பேசு” என்றார். அவர்கள் தூக்கிக் கொண்டிருந்ததால் என்னால் பேச முடியவில்லை. அவர் இறக்கிவிட்டவுடன் பேசத் தொடங்கினேன். எல்லாம். முடிந்தது. என் தந்தையாரைப் பார்த்து, “முதலியார், இவனை என்னச் செய்யப்போகிறீர்கள்?” என்று கேட்டார். அப்போது என் தந்தையார் “கல்லூரியில் படிக்கவைக்க எனக்கு வசதியில்லை. ஆகையால், வித்துவானுக்குப் படிக்கவைக்கப் போகிறேன்” என்றார். பிள்ளையவர்கள் “நான் கப்பலோட்டிய காலத்தில் வரவில்லையே. இவனைப் போய் வித்துவானாகப் படிக்கச் சொல்கிறீர்களே! ஏதாவது வழி செய்து, கல்லூரியில் படிக்க வையுங்கள்” என்று தழுதழுத்த குரலில் கூறினார். அந்த மகானின் ஆசீர்வாதத்தால் 1935இல் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பைப் பெற்றேன்.