பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30 ♦ நான் கண்ட பெரியவர்கள்


அவர்கள் விழுந்துவிட்டார்கள். பதறிப்போன நாங்களிருவரும் மெள்ள அவர்களைத் தூக்கி நிறுத்தினோம்; அவர்கள் முகத்தைப் பார்த்தோம்; விழுவதற்கு முன்னிருந்த அதே அமைதி. அந்த அமைதியில் எள்ளளவு மாற்றமும் இல்லை. ஆனாலும் தேர்ச் சங்கிலி தன் கைவரிசையைக் காட்டிவிட்டது. அதைக் கவனித்தாலும் நாங்களிருவரும் அதுபற்றி ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. எவ்வளவு நேரம் அங்கு நின்றோமோ, தெரியாது. தம்முடைய வழிபாட்டை முடித்துக்கொண்ட பிறகு “போகலாமா” என்று கேட்டார்கள் ஐயா. கொஞ்ச தூரம் நடந்துவந்து, வண்டியில் ஐயா அவர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டோம். யாரும் எதுவும் பேசவில்லை. சிதம்பரம் புகைவண்டிநிலையத்தை அடுத்துள்ள ரெயில்வே கேட்டைத் தாண்டும்போது, ஐயா அவர்கள் திடீரென்று “டேய் சம்பந்தா என் நெத்தியைப் பாரடா என்னமோ வீங்கியிருக்கிறது” என்றார்கள், ஒரு சிறிய எலுமிச்சம் பழமளவிற்கு நெற்றி வீங்கியிருந்தது. இது நானும் நடராசனும் ஏற்கனவே கண்ட காட்சிதான். தில்லைக்கூத்தன் தேர்ச்சங்கிலி ஐயா அவர்களுக்கு வழங்கிய பிரசாதம் அது. அமைதியாக, வண்டியை ஓட்டிக் கொண்டே, நடந்தவற்றைச் சொன்னேன். அவர்கள் எவ்விதப் பதிலும் சொல்லவில்லை. நான் கூறியது அவர்கள் செவியில் புகுந்ததா என்றுகூட எனக்குத் தெரியாது. மறுபடியும் அவர்களுடைய அகமனம் தில்லைக்கூத்தனிடம் சென்றுவிட்டது போலும்.

இல்லறத்தில் இருந்துகொண்டு, ஒரு பேராசிரியர் பதவியும் வகித்துக்கொண்டு, வெளியே தெரியும்படி எவ்விதப் பூசனையோ, அநுட்டானமோ எதுவும் செய்யாத ஒருவர், இவ்வளவு பெரிய நிலையை அடையமுடியும் என்பதற்கு ஐயா அவர்கள் ஓர் எடுத்துக்காட்டாவார்.

தொடக்கத்திலிருந்து இறுதிவரை செல்வம், புகழ், அதிகாரம், பதவி போன்ற எதிலும் ஈடுபடாமல்