பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34 ♦ நான் கண்ட பெரியவர்கள்


என்னிடம் கூறினார். எனவே, இயற்பியல் ஆனர்சில் சேர்ந்துவிட்டேன். அத்துறையில் பணிபுரிந்த பேராசிரியர்கள் திரு. எஸ்.ஆர். இராவ், திரு. நவநீத கிருஷ்ணன், திரு. ஆர்.கே.விஸ்வநாதன், திரு. ஸ்ரீராம் என்பவர்களையும், வேதியியலில் பணிபுரிந்த திரு. அனந்த கிருஷ்ணன் அவர்களையும் இன்றும் என்னால் மறக்க முடியவில்லை.

உயர்நிலைப் பள்ளியில் இயற்பியலை விருப்பப் பாடமாகப் படித்த எனக்குக் கணிதம் படிக்க வேண்டுமென்ற ஆர்வம் தோன்றவே, இன்டர்மீடியட்டில் கணிதத்தையும் விருப்பப் பாடமாக எடுத்துக்கொண்டேன். முதல் நாள் வகுப்பில் மிக எளிய சமன்பாடு ஒன்றைக் கரும்பலகையில் எழுதிய ஆசிரியர் திரு. சுப்பிரமணியம் அவர்கள் “இது எல்லோருக்கும் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்” என்றார். புரியவில்லை என்று எழுந்து கூறினேன். அப்பொழுது ‘உயர்நிலைப்புள்ளியில் இயற்பியல்தான் படித்தேன்’ என்று கூறினேன். எல்லோரும் கைகொட்டி நகைத்தார்கள். எல்லையற்ற அன்புடன் பேராசிரியர் சுப்பிரமணியம் அவர்கள் அன்று மாலை வீட்டுக்கு வந்து தம்மைப் பார்க்குமாறு பணித்தார். அன்றிலிருந்து கல்லூரி முடிவடைந்த பிறகு தினந்தோறும் அவரது இல்லத்திற்குச் சென்று கணிதம் பயின்றேன். கணிதம்மட்டுமா பயிற்றுவித்தார்? தினந்தோறும் மாலையில் சிற்றுண்டியும் அல்லவா தந்தார்? ஆறு மாதம் இலவசமாகச் சிற்றுண்டியோடு கணிதம் பயிற்றுவித்துத் தேர்வில் “D” வாங்குமாறு செய்தார். அந்தப் பெருமகனாரை எப்படி மறக்க முடியும்? பிறகு அவர் டில்லிக்குச் சென்றுவிட்டதாக அறிந்தேன். அண்மைக் காலத்தில் ஒன்று கேள்விப்பட்டேன். இந்த அரசியலை ஒரு கலக்குக் கலக்கிக்கொண்டிருக்கும் திரு. சுப்பிரமணியம் சுவாமி என் பேராசிரியரின் மகனார் என்பதே அச்செய்தியாகும்.