பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாஷா கவிசேகர மகாவித்துவான் ரா.இராகவையங்கார் சுவாமிகள் ♦ 37



“வள்ளுவன் வைத்த முறைவைப்புத்தான் சரி, படைதான் முதலில் இருக்க வேண்டும். அந்தப் படை குடிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவதால் அடுத்து குடி என்பதுதான் நிற்கவேண்டும். இவை இரண்டும் நன்கு அமைய வேண்டுமானால் உணவு உற்பத்தி பெருகியிருக்க வேண்டும் என்று தொடங்கி, மேலை நாட்டுத் தத்துவங்களை யெல்லாம் எடுத்துக் கூறிவிட்டு, மக்கியவல்லி என்பவன் எழுதிய ‘இளவரசன்’ (Prince) என்ற நூலிலிருந்தும் எடுத்துக்காட்டுகள் சொல்லி, இந்த முறைவைப்பே சரி” என்றும் வாதாடினேன். சுவாமிகள் வாயே திறக்கவில்லை. திடீரென்று எழுந்து போய்விட்டார். உடனிருந்த இருவரும் தேவையில்லாமல் நான் வந்து குட்டையைக் குழப்பிவிட்டேன் என்றும், ஒரு பெரியவரை மனம் நோகச் செய்துவிட்டேன் என்றும் ஏசினர். விடுதிக்குச் சென்றுவிட்டோம். மாலை ஐந்து மணியளவில் சுவாமிகளின் பணியாளர் என்னைத் தேடிக்கொண்டு விடுதிக்கு வந்துவிட்டார். சுவாமிகள் என்னை அழைத்து வரச் சொன்னதாகக் கூறி, என்னை அழைத்தார். உடனிருந்த அப்துல் காதர் கூறியது இன்னும் என் நினைவில் இருக்கிறது. “அடே சம்பந்தா சுவாமிகள் சும்மா போய் விட்டார் என்று நினைக்காதே. பழைய செருப்புத் தயார் செய்துவைத்திருக்கிறார் நீ போனவுடன் அதனாலேயே உன்னை மொத்தப் போகிறார்” என்றார். உடனே நான் ‘அப்படியே திருவடி தீட்சை நடந்தால் அப்பெரியாருடைய திருவடி தீட்சைக்கு மகிழ்ச்சியடைகிறேன்’ என்று கூறிவிட்டுப் புறப்பட்டேன்.

சுவாமிகள் வீட்டுக்குச் சென்றதும், பெரியதோர் அதிசயம் காத்திருந்தது. ஒரு பெரிய வெள்ளித் தட்டில் இரண்டு தோசைகள் வைக்கப்பட்டிருந்தன. பக்கத்தில் ஒரு வெள்ளித் தம்ளரில் தண்ணீர். நான் சென்று ‘சுவாமி வந்து விட்டேன்’ என்று கூறியவுடன், “முதலியார் மகனே! அந்தத் தோசையைச் சாப்பிடு” என்று பணித்தார்.