பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பாஷா கவிசேகர மகாவித்துவான் ரா.இராகவையங்கார் சுவாமிகள் ♦ 41



அக்காலத்தில் வாழ்ந்த பெரும் புலவர்கள் இலக்கணம், இலக்கியம் என்ற இரண்டிலும் ஆழங்கால்பட்டவர்கள் என்பதற்கு ஐயமே இல்லை. மிகப் பல புலவர்களோடு பழகியிருக்கிறேன், இவர்கள் புலமை, அறிவு வழிப்பட்டதே தவிர, உணர்வுவழிச் சென்றதேயில்லை. ஒரு பாடலை அக்கு வேறு அலக்கு வேறாகப் பிரித்து, புதிய புதிய பொருள் காண்பதில் மகிழ்ந்தார்களேதவிர, பாடலை முழுவதுமாகச் சுவைத்து இரசிக்கின்ற பழக்கம் பெரும்பாலும் இவர்கள்பால் இருந்ததில்லை. நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்திற்கு, வியாக்கியானம் என்ற பெயரில், மணிப்பிரவாள நடையில் உரை வகுத்தவர்களும் மேலே கூறிய முறையில் அறிவுவழிச் சென்றனரே தவிர, முழுமையாகச் சுவைத்தார்கள் என்று சொல்வதற்கில்லை. தனி ஒரு சொல், ஒரு சொற்றொடர் என்பவற்றை ஆங்காங்கே எடுத்துச் சுவைத்துள்ளனர். என்றாலும், முழுப் பாடலையோ அல்லது அது இருக்கும் பகுதியையோ எடுத்துச் சுவைத்தார்கள் என்று சொல்வதற்கில்லை. தனி மரத்தைக் கண்டு அதில் ஈடுபட்டு ஆய்வு நடத்திய இவர்கள், என்ன காரணத்தாலோ தோப்பை மறந்து விட்டனர்.

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இதே நிலைதான் நீடித்தது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறையிலிருந்த, நாவலர் சோமசுந்த பாரதியார், ந.மு.வேங்கடசாமி நாட்டார், திரு. கந்தசாமியார், திரு. பழனியப்ப பிள்ளை, திரு. பூவராகம் பிள்ளை, திரு. அருணாசலம் பிள்ளை, வைணவ வியாக்கியானங்களில் பேரறிவு படைத்த திரு. புருஷோத்தம நாயுடு ஆகியோர் மாபெரும் அறிஞர்களாவர். இவர்கள் அனைவரிடமும் ஒவ்வொரு துறையில் தமிழைக் கற்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தேன்.