பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42 ♦ நான் கண்ட பெரியவர்கள்



ஆனால், சுவைஞர் என்று எடுத்துக்கொண்டால் திரு. சுவாமிகளைப் போன்ற சுவைஞரைக் காண்டதரிது. இதற்கும் ஓர் எடுத்துக்காட்டு

தினந்தோறும் மாலை நான்கரை மணிக்கு தம் தடிக்கம்பை ஊன்றிக்கொண்டு சுவாமிகள் வருவதை அந்தக் கைத்தடி சிமெண்டுத் தரையில் பட்டு டொக் டொக் என்று ஒலியெழுப்புவதை வைத்தே அறியமுடியும். வகுப்பில் நாங்கள் மூவர்தான். ஒரு நாள் நான்கரை மணியாகியும் சுவாமிகள் வரவில்லை. அவர் காலந்தாழ்த்தி வரக்கூடும் என்று நினைத்த நான் ஆசிரியருக்குரிய நாற்காலியில் அமர்ந்துகொண்டு பெருங்குரலில் “சின்னக் கவலைகள் தின்னத் தகாதென்று நின்னைச் சரணடைந்தேன்” என்ற பாட்டைப் பாடிக்கொண்டிருந்தேன். திடீரென்று சுவாமிகள் வகுப்பினுள் நுழைந்துவிட்டார். டொக் டொக் சத்தம் கேட்காததால் ஏமாந்துவிட்டோம். காரணத்தைப் பின்னர் அறிந்தோம். அவர் பயன்படுத்தும் கைத்தடியின் அடியில் ரப்பர் வைத்துக் கட்டிவிட்டதால் சத்தம் எழவில்லை. அவரைக் கண்டவுடன் பதைபதைப்புடன் எழுந்து பயபக்தியுடன் நின்றுகொண்டிருந்தோம். என் குரலை நன்கு அறிந்திருந்த சுவாமிகள் “முதலியார் மகனே! யார் பாட்டுடா அது?” என்று கேட்டார். அது பாரதியாருடைய பாடல் என்று விடையிறுத்தேன். சுவாமிகள் “ஏண்டா, அரசாங்கத்துக்கு விரோதமா நாட்டுப்பாடல்கள்தான் பாடியிருக்கிறான் பாரதின்னு நினைச்சேன். இப்படிக்கூடப் பாடியிருக்கிறானா? இன்னும் சில பாடல்களைச் சொல்லு” என்றார். நான் மேலும் பாடிக்கொண்டிருந்தேன். ‘என்று தணியுமிந்த சுதந்திர தாகம்’ என்று தொடங்கும் பாடலில் வரும்

பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ